புதுவருட தினமான இன்று தமது பிள்ளைகள் எங்கே..? என கோசமிட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
வவுனியா, வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு முன்பாக 785 ஆவது நாளாக சுழற்சி முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் அவர்களது போராட்ட தளத்திற்கு முன்னால் இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தமிழ், சிங்கள புத்தாண்டை தமிழ், சிங்கள தலைவர்கள், அரசியல்வாதிகள் கொண்டாடி வருவதுடன் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் எமது பிள்ளைகள் எம்மிடம் வராமையால் நாம் வீதியோரத்தில் எமது பிள்ளைகளுக்காக கண்ணீருடன் ஏங்கிக் கொண்டிருக்கின்றோம்.
தமிழ் அரசியல் தலைமைகள் எம்மை கைவிட்டு விட்டு எமது வாக்குளைப் பெற்று தமது பொக்கற்றுக்களை நிரப்பியுள்ளனர். இனியும் வாக்கு என்று வந்தால் அவர்களுக்கு தெரிய வைப்போம். அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் என்பன தலையிட்டே எமது பிள்ளைகளை மீட்டுத் தர முடியும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
அத்துடன், போராட்டத்தில் ஈடுபட்ட தாய்மார் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடிகளை ஏந்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.