பெரம்பூர் பகுதியில் வாக்காளர்களுக்கு தபாலில் 500 ரூபாய் நோட்டு டன் கடிதம் வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 18-ந் தேதி நடக்கிறது. பாராளுமன்ற தேர்தலோடு பெரம்பூர் உள்பட 18 சட்டசபை இடைத்தேர்தலும், இதைத் தொடர்ந்து மே 19-ந் தேதி அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர், ஓட்டப்பிடாரம் சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெறுகிறது.
வாக்குப்பதிவுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம்-பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஓட்டுக்கு பணம் வாங்கும் சில வாக்காளர்களை குறி வைத்து புதுப்புது விதத்தில் அரசியல் கட்சியினர் பணம் கொடுத்து வருவது வாடிக்கையாக உள்ளது.
இந்த நிலையில் பெரம்பூர் பகுதியில் வாக்காளர்களுக்கு தபாலில் 500 ரூபாய் நோட்டு டன் கடிதம் வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெரம்பூர் பகுதியில் உள்ள பிரபல தனியார் ஆலை பல ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டது. அந்த தொழிற் சாலையின் தொழிற்சங்கம் பெயரில் இந்த தபால் வந்து உள்ளது. அந்த தபாலில் கடிதத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டும் இருந்தது.
கடிதத்தில், தேர்தலில் குறிப்பிட்ட வேட்பாளருக்கு வாக்கு அளிக்கும்படி எழுதப்பட்டு இருந்தது. இதேபோல் 500 ரூபாய் நோட்டுடன் கூடிய தபால் பெரம்பூர், கொடுங்கையூர், வியாசர்பாடி உள்ளிட்ட பகுதியில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வந்து இருப்பதாக தெரிகிறது.
ரூபாய் நோட்டுடன் வந்த கடிதத்தை சிலர் அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்ததால் இது வெளிச்சத்துக்கு வந்தது. அந்த தபால் பெரம்பூர் தபால் நிலையத்தில் இருந்து அனுப்பப்பட்டதாக தெரிகிறது.
இதேபோல் ரூபாயுடன் மேலும் கடிதம் வருமா? என்றும் சிலர் ஏக்கத்துடன் காத்து உள்ளனர். இதற்கிடையே ஓட்டுக்காக வாக்காளர்களின் வீட்டுக்கே தபாலில் ரூ. 500 நோட்டு அனுப்பப்பட்டது பற்றி தேர்தல் அதிகாரிகளுக்கும் புகார் வந்தது. அவர்கள் அரசியல் கட்சியினரை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். மேலும் தபாலில் பணம் அனுப்பியவர்கள் யார்? என்பது பற்றி ரகசிய விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர்.
பெரம்பூர் சட்டசபை இடைத்தேர்தலில் வேட்பாளர்களாக ஆர்.எஸ். ராஜேஷ் (அ.தி.மு.க.), ஆர்.டி.சேகர்(தி.மு.க.), வெற்றிவேல் (அ.ம.மு.க.) ஆகியோர் போட்டியிடுகிறார்கள். இதேபோல பெரம்பூர் தொகுதியை உள்ளடக்கிய வட சென்னை பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் கலாநிதி வீராசாமியும், அழகாபுரம் மோகன்ராஜ் (தே.மு.தி.க.), சந்தான கிருஷ்ணன் (அ.ம.மு.க.) போட்டியிடுகிறார்கள்.