பிரச்சினைக்கு தீர்வு காண அரசியல் தலைவர்கள் முன்வர வேண்டும் – சம்பந்தன்

375 0

தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண அரசியல் தலைவர்கள் முன்வர வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழ் சிங்கள மக்கள் இன்று சித்திரை புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். அதனை முன்னிட்டு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

எமது நாட்டில் தமிழ் மக்களும் சிங்கள மக்களும் ஒன்றிணைந்து கொண்டாடும் சித்திரைப் புத்தாண்டானது நல்லிணக்கம் மற்றும் புரிந்துணர்வு என்பவை இந்த இரு சமூகங்களுக்கும் இடையில் மேம்பட கிடைக்கப்பெற்ற ஒரு வரப்பிரசாதமான பண்டிகையாகுமென அவர் தெரிவித்துள்ளார்.

துரதிஸ்ட்டவசமாக எமது நாட்டில் அத்தகைய நம்பிக்கையை கடந்த காலங்களில் கட்டியெழுப்ப முடியவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன் விளைவாக இன்றும் மக்கள் பல்வேறு துன்பங்களையும் வேதனைகளையும் அனுபவித்து வருகிறார்கள். அதுமாத்திரமன்றி இரு சமூகங்களுக்குமிடையிலான விரிசல் அதிகரித்துள்ளதேயன்றி குறையவில்லை என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

மக்களின் அரசியல் அபிலாசைகள் நிறைவேறப்பெற்று இந்த நாட்டில் நிரந்தர அமைதியும் நீதியும் நிலைநாட்டப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த புத்தாண்டு நாளில், அற்ப அரசியல் இலாபங்களை கருத்திற்கொள்ளாது, நாட்டினை முன்னேற்றப் பாதையில் இட்டுச்செல்லும் ஒரே நோக்கத்தோடு, தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண முன்வரவேண்டும் என இந்நாட்டின் அரசியல் தலைவர்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

எதிர்கால சந்ததியினருக்கு வளம்மிக்கதும் நீதியையும், நேர்மையினையும் நிலைநாட்டும் ஒரு இலங்கை தீவினை உருவாக்குவது எமது கடமையாகும் என தெரிவித்த கூட்டமைப்பின் தலைவர், எனவே இந்த சித்திரை புத்தாண்டு நாளில் இந்த தலையாய கருமத்தினை நிறைவேற்ற இன, மத, கட்சி வேறுபாடின்றி உழைக்க முன்வருமாறு அனைத்து மக்களிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார்