ஆயுள்தண்டனை கைதி சேலம் மத்திய சிறையில் திடீர் உண்ணாவிரதம்

299 0

சேலம் மத்திய சிறையில் பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்த ஆயுள்தண்டனை கைதி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்தவர் செந்தில் (வயது 43). இவர் கடந்த 96-ம் ஆண்டு குடும்ப தகராறினால் அவரது தந்தையை கொலை செய்தவர். இதனால் அவர் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு விசாரணை நடந்து முடிந்து செந்திலுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 2007-ம் ஆண்டில் இருந்து செந்தில் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

நேற்று செந்தில் வழக்கமாக அடைக்கும் சிறையில் அடைக்காமல் வேறொரு அறையில் அடைக்கப்பட்டார். இதனால் செந்தில் ஆத்திரம் அடைந்தார்.பின்னர் அவர் சிறை அதிகாரிகளிடம் சென்று ஏன் தன்னை வேறு அறையில் அடைத்தீர்கள் என கேட்டார். அப்போது செந்திலுக்கும் சிறை அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் கோபம் அடைந்த சிறை அதிகாரி ஒருவர் செந்திலை திட்டிவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த செந்தில் தனக்கு நியாயம் கிடைக்கும் வரை சாப்பிட மாட்டேன் என கூறி உண்ணாவிரதம் இருந்தார்.இதை அறிந்த சிறை அதிகாரிகள் செந்திலை சமாதானம் செய்தனர். ஆனால் செந்தில் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.நேற்று மாலை 6 மணி அளவில் உண்ணாவிரதம் இருக்க தொடங்கிய செந்தில் இன்று 2-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.