திருக்குவளை தியாகராஜர் கோவிலில் பல கோடி மதிப்புள்ள மரகதலிங்கத்தை திருடி சென்ற கொள்ளையர்களை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.நாகை மாவட்டம் திருக்குவளையில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான தியாகராஜ சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் மிகவும் பழமை வாய்ந்த மரகத லிங்கம் உள்ளது.
இந்த மரகத லிங்கத்துக்கு தினமும் காலை, மாலை நேரங்களில் அபிஷேகம், ஆராதனை நடப்பது வழக்கம்
கோவில் அர்ச்சகர் கணேச குருக்கள் கடந்த 9-ந் தேதி காலை மரகதலிங்கத்துக்கு அபிஷேகம், ஆராதனை செய்து விட்டு பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்து பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார்.
பின்னர் மாலை 6 மணிக்கு மரகதலிங்கத்துக்கு பூஜை செய்வதற்காக மெய்க்காப்பாளர் ரவிச்சந்திரனுடன் பாதுகாப்பு பெட்டகத்தை திறக்க சென்ற போது பெட்டகத்தின் பூட்டுகள் உடைக்கப்பட்டு கிடந்தது.
அங்கிருந்த மரகதலிங்கத்தை காணவில்லை. அதன் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்து கோவில் கண்காணிப்பாளர் சவுந்தர ராஜன் திருக்குவளை போலீசில் புகார் அளித்தார்.
தகவல் கிடைத்ததும் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரை, டி.எஸ்.பி. அன்பு மற்றும் கைரேகை நிபுணர்கள் அங்கு வந்து கோவில் அர்ச்சகர், மெய்க்காப்பாளர் மற்றும் பலரிடம் விசாரணை நடத்தினார்கள்.
தஞ்சை சரக டி.ஐ.ஜி. செந்தில் குமாரும் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டார். கொள்ளையர்களை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.
அவர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.