ஜார்க்கண்ட் மாநிலத்தில் பணியில் இருந்த ஆலங்குளத்தைச் சேர்ந்த எல்லை பாதுகாப்பு படைவீரர் மின்னல் தாக்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ஆலங்குளத்தை அடுத்த சோலைசேரியைச் சேர்ந்த விவசாயக் கூலித் தொழிலாளி பேச்சிமுத்து. இவரது மகன் காசிநாதன் (வயது 26). இவர் எல்லை பாதுகாப்பு படை வீரராக ஜார்க்கண்ட் மாநிலம் கஜரிபேட் என்ற இடத்தில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த 9-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை)மாலை பணியில் இருந்த போது மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் உடலை கைப்பற்றி ராஞ்சி மருத்துவமனையில் அனுமதித்தனர். காசிராஜனின் உடல் நேற்று மாலை புதுதில்லி விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரத்திற்கு கொண்டு வரப்பட்டது. அதன் பின்னர் சொந்த ஊரான சோலை சேரிக்கு கொண்டு வரப்பட்டு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. காசிநாதனின் மரணத்தை அடுத்து சோலைசேரி கிராமம் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. காசிநாதனுக்கு 3 சகோதரர்களும், 3 சகோதரிகளும் உள்ளனர்.