காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகம், புதுச்சேரியை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டினார்.திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு சுவாமிதரிசனம் செய்வதற்காக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வந்தார். சுவாமி தரிசனம் செய்த பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி டெல்டா மாவட்டங்களில் தற்போது மத்திய உயர்மட்ட தொழில்நுட்ப குழு ஆய்வு நடத்தியுள்ளது. சம்பா சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் நஷ்டமடைந்திருப்பதை விவசாயிகளும், அரசியல் கட்சி பிரமுகர்களும் எடுத்து கூறியுள்ளனர். மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்து வருகிறது.
மத்திய அரசின் இப்போக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களை வஞ்சிப்பதாக உள்ளது. ஏற்கனவே வறட்சியினால் விவசாயிகள் பாதிப்படைந்த போது மத்திய அரசு வழங்கிய நிவாரணம் விவசாயிகளை முழுமையாக சென்றடையவில்லை. இம்முறை மத்திய அரசு வழங்கும் நிவாரணம் முழுமையாக சென்றடையும் என்று நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.