மேகதாதுவில் அணை: தமிழக விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்பது ராகுல்காந்திக்கு தெரியாதா?

316 0

கர்நாடகாவில் மேகதாதுவில் அணை கட்டப்படும் என்று பேசும் ராகுல்காந்திக்கு தமிழக விவசாயிகளின் நலன் பாதிக்கப்படும் என்பது தெரியாதா? என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். 

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாசுக்கு ஆதரவாக நேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேச்சேரி, மேட்டூர் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-

அ.தி.மு.க. வேட்பாளர்களையும், கூட்டணி கட்சி வேட்பாளர்களையும் ஆதரித்து இதுவரை 35 நாடாளுமன்ற தொகுதியில் உள்ள 210 சட்டமன்ற தொகுதிகளுக்குச் சென்று பல்வேறு இடங்களில் பேசிவந்துள்ளேன். நான் பொதுமக்களை சந்திப்பதைத் தான் முழு நோக்கமாக கருதி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறேன்.

ஆனால், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் என்னை பற்றியும், கூட்டணி கட்சி தலைவர்கள் பற்றியும் தரக்குறைவாக பேசி வருகிறார். தி.மு.க.வினர் இதுவரை தேர்தல் சமயத்தில் அளித்த எந்த வாக்குறுதிகளையாவது நிறைவேற்றியுள்ளனரா? தேர்தலுக்கு தேர்தல் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அளித்து, மக்களை குழப்பமடையச் செய்து வாக்குகளை பெறுவதே அவர்கள் வழக்கம். ஆனால், அ.தி.மு.க. அரசு அறிவித்த அனைத்து வாக்குறுதிகளையும் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது.

ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது ஏழை, எளிய மக்களின் நலனுக்காக எந்த திட்டத்தையும் நிறைவேற்றாத காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி தற்போது வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வழங்குவதாக பேசிவருகிறார். இது சாத்தியமற்றது, அதிக நிதி தேவைப்படும்.

ராகுல்காந்தி, மாநிலத்திற்கு மாநிலம் மாறுபட்ட கருத்துக்களுடன் பேசிவருகிறார். கர்நாடகாவில் பேசுகையில், கர்நாடகாவில் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டப்படும் என்கிறார். இன்று தமிழ்நாட்டில் சேலம், கிருஷ்ணகிரியில் விவசாயிகளின் நலன் குறித்து பேசுகிறார். காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் போது தமிழ்நாட்டு விவசாயிகளின் நலன் பாதிக்கும் என்பது அவருக்கு தெரியாதா?

கேரளாவில் கம்யூனிஸ்டு கட்சியை எதிர்த்து காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. தமிழ்நாட்டில் கம்யூனிஸ்டு கட்சிக்கு காங்கிரஸ் ஓட்டு கேட்கிறது, காங்கிரஸ் கட்சிக்கு கம்யூனிஸ்டு கட்சி ஓட்டுக்கேட்கிறது. இப்படி கொள்கை அளவிலே ஒருமித்த கருத்து இல்லாத இதுபோன்ற சந்தர்ப்பவாத கூட்டணியால் எப்படி ஒரு நிலையான ஆட்சியை தரமுடியும்.

கேரளாவிலும், கர்நாடகாவிலும் தமிழர்கள் நலனுக்கு எதிராக பேசிவரும் காங்கிரஸ் கட்சியுடன் தி.மு.க. கூட்டணி வைத்துள்ளது என்றால், தமிழ்நாடு பாலைவனமாக ஸ்டாலின் துணைபோகிறாரா? உதயநிதி ஸ்டாலின் 4 படங்களில் நடித்திருக்கிறார். கருணாநிதியின் பேரன், ஸ்டாலின் மகன் அவ்வளவு தான். அதைத் தவிர வேறு என்ன தகுதி இருக்கிறது. உதயநிதிக்கு அரசியலில் என்ன அனுபவம் இருக்கிறது.

ஸ்டாலின் எதைப் பற்றி பேசினாலும் எனக்கு கவலையில்லை. ஏனென்றால், நான் கிராமத்தில் பிறந்து வளந்தவன். கடினமாக உழைத்து நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறேன். நான் எதையும் தாங்கிக் கொள்வேன். ஆனால் ஸ்டாலினுக்கு அந்த சக்தி இருக்கிறதா எனத் தெரியவில்லை.

ஒரு கூட்டத்தில் பேசும்போது, “எனக்கு ஒரு கட்டி, பிரதமருக்கு ஒரு கட்டி இருக்கிறது அதை அப்புறப்படுத்த வேண்டும்” என பேசியிருக்கிறார். இவர் 6 மாதத்திற்கு ஒரு முறை எதற்காக மருத்துவ பரிசோதனை என்ற பெயரில் லண்டன் சென்று வருகிறார். அதன் மர்மம் என்ன? என்பது நாட்டு மக்களுக்கு ஸ்டாலின் தெரிவித்தால் நன்றாக இருக்கும். நான் அவரைப் பற்றி பேசத்தொடங்கினால் அவரால் தாக்குப்பிடிக்க முடியாது என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.

இப்பகுதி மக்கள், என்னுடைய மக்கள், எனது சொந்த மாவட்ட மக்கள். நமது மாவட்டத்திற்கு முதல்-அமைச்சர் பதவி கிடைத்தது நமக்கெல்லாம் பெருமை. ஒரு முதல்-அமைச்சரை பார்க்க வேண்டும் என்றால் முன் அனுமதி பெற்றுத்தான் சந்திக்க வேண்டும். ஆனால், நீங்கள் எந்த நேரமும் என்னை சந்தித்து கோரிக்கைகளை வைக்கலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேச்சேரி பஸ் நிலையம் அருகே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக மு.க.ஸ்டாலின் மட்டும்தான் முன்மொழிந்தார். அவர்கள் கூட்டணியில் உள்ள மற்ற யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே அவர்கள் கூட்டணியில் யார்? பிரதமர் வேட்பாளர் என்பதில் ஒற்றுமை இல்லை. நாடு பாதுகாப்பாக இருக்க மத்தியில் நிலையான ஆட்சி அமைய வேண்டும். அப்போது தான் மாநிலத்துக்கு போதுமான நிதி கிடைக்கும்.

நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அரசு அமைந்தவுடன், கோதாவரி-காவிரி நதிகள் இணைப்பு திட்டத்தை முதல் கோரிக்கையாக நிறைவேற்ற விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்”.