கைதான இளைஞர்கள் காணாமல் போகச் செய்யப்பட்ட வழக்கில் 16 இராணுவ சிப்பாய்களுக்கு விளக்கமறியல்

360 0

625-500-560-350-160-300-053-800-900-160-90யாழ்ப்பாணம் அச்சுவேலிப் பகுதியில் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் இருவர் காணாமல் போன சம்பவத்தில் ஈடுபட்ட 16 இராணுவ சிப்பாய்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 1998 ஆம் ஆண்டு அச்சுவேலியில் இருந்து இராணுவ முகாமில் நிலை கொண்டிருந்த இராணுவத்தினரால் அப்பகுதியினைச் சேர்ந்த இரு இளைஞர்கள் காணாமல் போகச் செய்யப்பட்டிருந்தனர்.
இச் சம்பவம் குறித்த வழக்கு யாழ்.நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வழக்கின் மேலதிக நடவடிக்கைகளுக்காக சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இந்நிலையில் குறித்த படைமுகாமில் நிலை கொண்டிருந்த 16 இராணுவ சிப்பாய்களுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கின் குற்றப் பகிர்வு பத்திரம் யாழ்.நீதவான் நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட்டது.
காணாமல் போகச் செய்யப்பட்ட வழக்கினை கொலை வழக்காக விசாரணை செய்யும்படி குற்றப் பகிர்வு பத்திரம் ஊடாக நீதிமன்றத்திற்கு வலியுறுத்தப்பட்டிருந்தது.
அந்த அறிக்கையின் பிரகாரம், சந்தேகநபர்களான 16 இராணுவத்தினருக்கும் யாழ். நீதவான் நீதிமன்றினால் அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டது.
இதன் பிரகாரம் கடந்த மாதம் 26ம் திகதி ஓய்வு பெற்ற ஐந்து இராணுவத்தினர் நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர்.
அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டதுடன், ஏனைய 11 பேரையும் அடுத்த வழக்கின் போது, நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு அன்றையதினம் அச்சுவேலி பொலிஸாருக்கு உத்தரவிட்டிருந்தார்.
இந்தநிலையில் மற்றைய 11 பேரையும் அச்சுவேலி பொலிஸார் இன்று திங்கட்கிழமை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.
இதன்போது இவர்களை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.