மண்டைதீவு காணி சுவீகரிப்பு – மக்கள் எதிர்ப்பால் நில அளவீடு பணிகள் நிறுத்தம்

256 0

யாழ்ப்பாணம் மண்டைதீவில் கடற்படையினர் சுவீகரிப்பதற்காக மேற்கொள்ளப்படவிருந்த நில அளவீடு செய்யும் பணிகள் மக்களின் எதிர்ப்பு போராட்டத்தால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.

மண்டைதீவு கிழக்கு அம்மன் கோயிலுக்கு முன்பாக இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணியளவில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வேலணை பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட மண்டைதீவு கிழக்கு பகுதியில் நிலை கொண்டுள்ள கடப்படையினர், அப்பகுதியிலுள்ள சுமார் 11 பேருக்குச் சொந்தமான 18 ஏக்கர் 1 நூட் 10 பேர்ச்சஸ் காணியை ஆக்கிரமித்து அதில் முகாமிட்டுள்ளனர்.

குறித்த படைமுகாம் அமைந்துள்ள காணியை நிரந்தரமாக சுவீகரித்து படை முகாமினை விஸ்தரிப்புச் செய்வதற்கான நடவடிக்கைகளை கடற்படையினர் மேற்கொண்டுள்ளனர்.

அதன் முதற்கட்டமாக குறித்த காணியை சட்ட ரீதியில் சுவீகரிப்பதற்காக நில அளவை நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போவதாகவும் நில அளவை திணைக்களத்தினால் காணி உரிமையாளர்களுக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது.

காணி சுவீகரிப்புக்கான நில அளவை நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்த காணி உரிமையாளர்கள், அப்பகுதி மக்கள் மற்றும் பொது அமைப்புக்களுடன் இணைந்து அளவீடு செய்ய இடமளிக்காது எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

இதனையடுத்து காணி சுவீகரிப்புக்காக நில அளவீடு செய்யவந்த நில அளவை திணைக்களத்தினர் மக்களின் எதிர்ப்பால் அங்கிருந்து திரும்பிச் சென்றுள்ளனர்.