அரசியலமைப்பில் புத்த தர்மம் பாதுகாக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஏற்றுக் கொண்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்து கருத்து வெளியிட்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க,
‘புத்த தர்மத்தை பாதுகாக்கின்றமை குறித்து எந்தவித பிரச்சினையும் கிடையாது. புத்த தர்மத்தை பாதுகாப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட பாராளுமன்றத்திலுள்ள அனைத்து கட்சிகளும் இணக்கம் தெரிவித்துள்ளன. புத்த தர்மம் எமது அரசியலமைப்பில் பாதுகாக்கப்பட வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதனால் எந்தவித பிரச்சினையும் கிடையாது. அரசியல் கட்சிகள் மாத்திரமல்ல, கத்தோலிக்க சபையின் மெல்கம் ரஞ்ஜித் கர்தினலும், அதேபோன்று இந்து மற்றும் முஸ்லிம் மதங்களின் தலைவர்களும் புத்த தர்மம் பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
அத்துடன், அரசியலமைப்பிலுள்ள இந்த சரத்தை நாம் பாதுகாக்க வேண்டும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
புதிய அரசியலமைப்பொன்று உருவாக்கப்படும் பட்சத்தில், அந்த சரத்து உள்வாங்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அதனால் பிரச்சினையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதாக இதனை கருத வேண்டாம்’ என்று மேலும் தெரிவித்துள்ளார்.