துப்பாக்கி சூடு நடத்திய போலீசார் மீது நடவடிக்கை..!

218 0

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் கொள்கை முடிவு எடுத்து, துப்பாக்கி சூடு நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தூத்துக்குடியில் நடந்த பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் கூறினார்.


தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் கனிமொழி, விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தி.மு.க. வேட்பாளர் ஜெயக்குமார் ஆகியோரை ஆதரித்து பிரசார பொதுக்கூட்டம் நேற்று காலை புதுக்கோட்டை அருகே உள்ள மங்களகிரி விலக்கு பகுதியில் நடந்தது.

இந்த கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கலைஞரின் பிள்ளைகள்
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளராக எனது தங்கை கனிமொழி போட்டியிடுகிறார். அவருக்கும், விளாத்திகுளம் தொகுதி வேட்பாளர் ஜெயக்குமாருக்கும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.
அனைத்து தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் யார் போட்டியிட்டாலும், அவர்கள் அத்தனை பேரும் கலைஞரின் பிள்ளைகள்தான் என்று பேசி வருகிறேன். இன்று கலைஞரின் பிள்ளையே தூத்துக்குடியில் போட்டியிடுகிறார்.
பார்லிமெண்ட் டைகர்
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக கனிமொழி நிறுத்தப்பட்டு இருக்கிறார் என்று சொல்வதை விட உங்களிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறார். அவர் போட்டியிடுகிறார் என்றால், தலைவர் கருணாநிதியே போட்டியிடுகிறார். ஏன் நானே போட்டியிடுகிறேன். அதனை உணர்ந்து நீங்கள் ஆதரவு தர வேண்டும்.
எனது தங்கை, கவிஞராக, எழுத்தாளராக, பத்திரிகையாளராக, பேச்சாளராக படிப்படியாக ஒவ்வொரு துறையிலும் தனக்கென ஒரு முத்திரை பதித்து சிறப்புக்குரிய இடத்தை பிடித்து வளர்ந்து உள்ளார். சமூக போராளியாகவும் உள்ளார். ‘பார்லிமெண்ட் டைகர்’ என்ற பட்டத்தையும் பெற்று உள்ளார். அவர் தூத்துக்குடியில் உங்களுக்கு டைகராக விளங்குவார்.
துப்பாக்கி சூடு
மற்ற தொகுதிகளின் மக்களைவிட தூத்துக்குடி தொகுதி மக்களுக்கு முக்கிய கடமை உள்ளது. தூத்துக்குடியில் அப்பாவி மக்கள் 13 பேரை சுட்டுக்கொலை செய்து இருக்க கூடிய அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணிக்கு தக்க தண்டனை தரக்கூடிய சூழ்நிலை வருகிற 18-ந் தேதி உங்களுக்கு கிடைத்து உள்ளது.
இந்த துப்பாக்கி சூட்டை நடத்தி உள்ள எடப்பாடி அரசு கொலைகார அரசாக இருப்பதால், அதனை தூக்கி எறிய வருகிற 18-ந் தேதியை நீங்கள் பயன்படுத்திட வேண்டும்.
குடும்பம், குடும்பமாக, குழந்தைகளுடன் வந்தவர்களை சுட்டுக்கொன்றார்கள். பொதுவாக கூட்டத்தை கலைக்க வானத்தை நோக்கி சுடுவார்கள். அந்த முறையை கடைபிடிக்காமல் 13 பேரை சுட்டு கொன்று உள்ளனர். கலைந்து ஓடிய மக்களையும் சுட்டு உள்ளனர். துரத்தி துரத்தி மக்களை சுடுவதற்கு உத்தரவிட்டது யார்?. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியா?, தலைமை செயலாளர் கிரிஜாவா?, பிரதமர் மோடியா? என்ற கேள்விதான் எழுந்து கொண்டு இருக்கிறது.
தமிழிசைக்கு அனுதாபம்
தூத்துக்குடி தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராக தமிழிசை போட்டியிடுகிறார்.
தமிழிசை போட்டியிடுவதற்கு தூத்துக்குடி தொகுதிதான் கிடைத்ததா?. இங்கு தானே ஸ்டெர்லைட் பிரச்சினை, மீனவர் பிரச்சினை, தீப்பெட்டி தொழிலாளர் பிரச்சினை உள்ளது. இதனை பற்றி செவிசாய்க்காத, சிந்தித்து பார்க்காத தமிழிசை எந்த தைரியத்தில் தூத்துக்குடியில் போட்டியிடுகிறார். தோற்பதற்காகவே வந்து இருக்கிறீர்களே. டெபாசிட் இழந்து போகும் சூழலில் இந்த தொகுதியை தேர்ந்தெடுத்து உள்ளர்களா?. ஆகையால் முதலிலேயே அவருக்கு அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன். அவர்கள் கட்சிக்குள்ளேயே சதி செய்து, அவரை இங்கு நிறுத்தி இருக்கிறார்களோ என்று நினைக்கிறேன்.
கருணாநிதி பிறந்த நாளில் புதிய ஆட்சி
தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு எதுவும் செய்யவில்லை என்று கோவையில் மோடி பேசி உள்ளார். அ.தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையே. இது பிரதமருக்கு தெரியவில்லையா?. தெரிந்தும், தெரியாதது போன்று இருப்பதால்தான் பாசிச பா.ஜனதா என்கிறோம்.
தற்போது மோடிதான் அ.தி.மு.க.வுக்கு முட்டு கொடுத்துக்கொண்டு இருக்கிறார். 22 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் வெற்றி பெற்று தி.மு.க. ஆட்சிக்கு வரும். ஜூன் மாதம் 3-ந் தேதி தலைவர் கருணாநிதி பிறந்தநாளில் மோடி பிரதமராக இருக்க மாட்டார். அன்று தமிழகத்தில் புதிய ஆட்சி மலரும்.
ஸ்டெர்லைட் ஆலை கொள்கை முடிவு
அ.தி.மு.க. அரசு ஸ்டெர்லைட் ஆலையை கொள்கை முடிவு எடுத்து மூடவில்லை. ஆகையால் தி.மு.க. ஆட்சி அமைந்ததும், கொள்கை முடிவு எடுத்து, சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவோம். ஜனநாயக ரீதியில் அமைதியாக போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய போலீஸ் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.