தனியார் நிறுவனங்களிடம் மின்கொள்வனவிற்கு அமைச்சரவை அங்கீகாரம்

257 0

தனியார் நிறுவனங்களிடம் இருந்து மின்சாரத்தைக் கொள்வனவு செய்வதற்கான மின்சக்தி, சக்திவலு மற்றும் வர்த்தக அமைச்சினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை நேற்று அங்கீகாரம் வழங்கியுள்ளதுடன், மின்சார நெருக்கடிக்கு தீர்வு காண்பது குறித்த பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்கென குழுவொன்றை நியமிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் ரவி கருணாநாயக்க சமர்ப்பித்துள்ள மின்கொள்வனவு யோசனையின்படி பல்லேகல உபமின்னுற்பத்தி நிலையத்திற்கு 24 மெகாவோட்ஸ் மின்சாரமும், காலி உபமின்னுற்பத்தி நிலையத்திற்கு 10 மெகாவோட்ஸ் மின்சாரமும் அக்ரிகோ இன்டர்நெஷனல் புரொஜெக்ட்  லிமிடெட் நிறுவனத்திடமிருந்து கொள்வனவு செய்யப்படவுள்ளது. 

இந்நிறுவனத்தில் ஒரு கிலோவோட்ஸ் மின்சாரம் 30.20 ரூபா என்ற அடிப்படையில் மொத்தமாக 34 மெகாவோட்ஸ் மின்சாரம் கொள்வனவு செய்யப்படவுள்ளது.

அதேபோன்று ஐக்கிய அரபு இராச்சியத்தின் அல்டாகா ஓல்டர்நேட்டிவ்ஸ் சொலியூஷன் குளோபல் நிறுவனத்திடமிருந்து ஒரு கிலோவோட்ஸ் மின்சாரம் 30.58 ரூபாவிற்கு 10 மெகாவோட்ஸ் மின்சாரத்தை மஹியங்கனை உபமின்னுற்பத்தி நிலையத்திற்கும், ஒரு கிலோவோட்ஸ் மின்சாரம் 30.63 ரூபா அடிப்படையில் 8 மெகாவோட்ஸ் மின்சாரத்தை பொலனறுவை உபமின்னுற்பத்தி நிலையத்திற்கும் கொள்வனவு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் அம்பாந்தோட்டை உபமின்னுற்பத்தி நிலையத்திற்கென ஒரு கிலோவோட்ஸ் மின்சாரம் 28.43 ரூபாவிற்கு 24 மெகாவோட்ஸ் மின்சாரத்தையும், ஹொரணை உபமின்னுற்பத்தி நிலையத்திற்கென ஒரு கிலோவோட்ஸ் மின்சாரம் 28.70 ரூபாவிற்கு 24 மெகாவோட்ஸ் மின்சாரத்தையும் ஹொங்கொங்கில் உள்ள வீ பவர் ஹோல்டிங்ஸ் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து கொள்வனவு செய்யப்படவுள்ளது.

அத்தோடு மின்நெருக்கடிக்கான தீர்வு தொடர்பில் ஆராய்ந்து, பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் குழுவொன்றை நியமிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.