ஈ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். அணியினர் இந்த தேர்தலோடு காணாமல் போவார்கள்- தினகரன்

260 0

மோடியை டாடி என அழைக்கும் ஈ.பி.எஸ்.- ஓ.பி.எஸ். அணியினர் இந்த தேர்தலோடு காணாமல் போய்விடுவார்கள் என்று டி.டி.வி. தினகரன் கூறினார்.

சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் பாராளுமன்ற, சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் அ.ம.மு.க. கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார்.

மத்திய பா.ஜனதா அரசின் சொல் பேச்சை கிளி பிள்ளையாக கேட்கும் தமிழக அரசு மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

ஜெயலலிதா மரணத்தில் உரிய நீதி வேண்டும் என்று அரசுக்கு எதிராக போராடிய ஓ.பி.எஸ். சுய நலமாக செயல்படுகிறார்.

அ.தி.மு.க. அரசு மக்களை வஞ்சித்து வருவதால், அக்கட்சி டெபாசிட் இழக்க வாக்காளர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அ.ம.மு.க. வினருக்கு செல்வாக்கு அதிகரித்துள்ளதை அ.தி.மு.க.வால் ஜீரணிக்க முடிய வில்லை.

மோடியை டாடி என அழைக்கும் ஈ.பி.எஸ். மற்றும் ஓ.பி.எஸ். அணியினர் இந்த தேர்தலோடு காணாமல் போய் விடுவார்கள்.

ஆர்.கே.நகர் போன்று தற்போதைய தேர்தலிலும் அ.தி.மு.க.வுக்கு பாடம் புகட்டி, டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும்.

ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு செல்லாமல், அவரை மறந்துவிட்ட எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு பாடம் புகட்ட வேண்டும். தேர்தல் முடிந்ததும் அ.தி.மு.க. தொண்டர்கள் அனைவரும் நம் பக்கம் வந்து விடுவார்கள்.

காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி கட்சியினர், நம்மை பார்த்து சுயேட்சை என்கின்றனர். ஆர்.கே.நகரில் இந்த சுயேச்சையிடம் தான் தி.மு.க. டெபாசிட் இழந்தது என்பது மறந்து போய் விட்டதா?

எனக்கு தெரிந்து நான் கல்லூரியில் படிக்கும் காலத்தில் இருந்து, ப.சிதம்பரம் பெரிய பொருளாதார மேதை. பல தடவை மத்திய மந்திரியாக இருந்த அவர், சிவகங்கை தொகுதிக்கு எந்த வளர்ச்சியும் கொடுக்க வில்லை.

தி.மு.க. கூட்டணி மத சார்பற்ற கூட்டணி என மு.க.ஸ்டாலின் கூறுகிறார். கி.வீரமணி, கிருஷ்ணரை பற்றி விமர்சிக்கிறார். தி.மு.க. கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி.

மோடியிடம் தலை வணங்காத ஒரே கட்சி அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் தான். இரட்டை இலை சின்னம் துரோகம் செய்தவர்கள் கையில் சிக்கி இருப்பதால், எம்.ஜி.ஆர். தொகுதியில் கூட இரட்டை இலையை தோற்கடிக்கும் நிலை வந்துள்ளது.

நாம் அனைவருக்கும் காவலராகவும், தோழராகவும் இருப்போம். பொது நல அமைப்பாக செயல்படுவோம். யாரோடும் எப்போதும் சமரசம் செய்ய மாட்டோம்.

இவ்வாறு அவர் பேசினார்.