சிறைச்சாலையில் சயனைட், ஊசிகள் மீட்பு

273 0

வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதியொருவரிடமிருந்து, சயனைட் குப்பிகள் இரண்டும் மருந்து ஏற்றப்பட்ட ஊசிகள் இரண்டும், புலனாய்வுத் துறை அதிகாரிகளலால் கைப்பற்றப்பட்டுள்ளன என, பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாண புலனாய்வுத்துறை பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்தத் தகவல்களை அடுத்து, நேற்று முன்தினம் (08) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புத் தேடுதலின் போதே, இவை கைப்பற்றப்பட்டுள்ளன.

அந்தத் தேடுதலில், சயனைட் அடங்கிய சயனைட் குப்பிகள் இரண்டு, மருந்து ஏற்றப்பட்ட ஊசிகள் இரண்டும் கைப்பற்றப்பட்டன. அதனை வைத்திருந்தார் என்ற சந்தேகத்தில், கைதியொருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி விவகாரத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான அந்தக் கைதி, ஹெரோய்ன் போதைப்பொருள் தொடர்பிலான வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு, சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார். அவர், “மரால சுரங்க” என்றழைக்கப்படும் சமன் புஷ்பகுமார என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சிறைச்சாலைக்குள் இருந்து செயற்படும் குழுவின் உறுப்பினர்களில் இருவரை படுகொலை செய்யும் நோக்கிலேயே, இந்த பொருள்கள் தருவிக்கப்பட்டதாக, விசாரணைகளின் போது அவர் தெரிவித்துள்ளார்.

சயனைட் அடங்கிய குப்பிகள் இரண்டும் மருந்து ஏற்றப்பட்ட ஊசிகள் இரண்டும், மேலதிக விசாரணைகளுக்காக, பொரளை பொலிஸுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன. அத்துடன், அவற்றை அரச இரசாயன பகுப்பாய்வுத் திணைக்களத்துக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.