அமெரிக்க உள்துறை மந்திரி திடீர் ராஜினாமா!

473 0

அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறை மந்திரி கிர்ஸ்ட்ஜென் நீல்சென் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். 

அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறை மந்திரியாக பதவி வகித்து வந்தவர் கிர்ஸ்ட்ஜென் நீல்சென்.

மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்பும் விவகாரம், குடும்பமாக வரும் அகதிகளை பிரிந்து தனிதனியாக காவல் மையங்களில் அடைப்பது உள்ளிட்ட டிரம்பின் சர்ச்சைக்குரிய திட்டங்களை இவர் அமல்படுத்தி உள்ளார்.

இவர் டிரம்பின் விசுவாசியாக இருந்தபோதிலும், அகதிகள் விவகாரத்தில் போதியளவு கடுமை காட்டவில்லை என கிர்ஸ்ட்ஜென் நீல்சென் மீது டிரம்ப் அவ்வப்போது அதிருப்தி தெரிவித்து வந்தார்.

இந்த நிலையில், கிர்ஸ்ட்ஜென் நீல்சென் நேற்று திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். இதற்கான காரணம் எதையும் குறிப்பிடாத கிர்ஸ்ட்ஜென் நீல்சென் ‘பதவியை துறக்க இதுதான் சரியான தருணம்’ என தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.

கிர்ஸ்ட்ஜென் நீல்சென் ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட டிரம்ப், தற்காலிக உள்துறை மந்திரியாக சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு கமிஷனர் கெவின் மெக்லீயன் பொறுப்பு வகிப்பார் என கூறினார்.