தென்னை மரங்களை சேதப்படுத்திய யானைகள்

355 0

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேசத்திலுள்ள நெடியமடு கிராமத்துக்குள் காட்டுயானைகள் நுழைந்து தென்னந்தோட்டம் ஒன்றினை சேதப்படுத்தியுள்ளது. 

திங்கட்கிழமை 09ஆம் திகதி  இரவு காட்டுயானைகள் கிராமத்துக்குள் ஊடுருவி அங்குள்ள தொன்னந் தோப்பில் இருந்த சுமார் 36 தென்னை மரங்களை அழித்து சேதப்படுத்தியுள்ளது. 

குறித்த பிரதேச மக்களுக்கு காட்டு யானைகளின் அச்சுறுத்தல் புதிதல்ல, கடந்த வருடமும் எங்களது தோட்டத்திலிருந்த 20 தென்னைமரங்கள் அழிக்கப்பட்டது. 

கடந்த இரண்டு, மூன்று வருடங்களுக்கு மேலாக தண்ணீர் ஊற்றி பராமரித்து வளர்த்து வந்த  தென்னை மரங்களை திங்கட்கிழமை இரவு  காட்டுயானைகள் அழித்துவிட்டதாக குறித்த தென்னந் தோப்பின் உரிமையாளர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

 யானை பாதுகாப்பு வேலியில் மின்சாரம் இருந்திருந்தால் தமது தோட்டத்திற்கு காட்டுயானைகள் வந்து இந்த அழிவினை ஏற்படுத்தியிருக்காது எனவும் இதனால் தமது குடும்ப பொருளாதாரத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாகவும் தென்னந் தோப்பின் உரிமையாளர் மேலும் தெரிவித்துள்ளார். 

மேலும், நெடியமடு, உன்னிச்சை, ஆயித்தியமலை  போன்ற பிரதேசங்களில் யானை தடுப்பு மின்சார வேலி இருந்தபோதிலும் கடந்த பல மாதங்களாக அதற்கு மின்சரம் வழங்கப்படாமல் உள்ளதாகவும், தாம் செய்கை பண்ணப்படும் விவசாய உற்பத்திகளையும் நெல் வயல்களையும் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையிலே இரவு பகலாக கண்விழித்து பாதுகாத்து வருவதாக இங்குள்ள விவசாயிகள் கருத்துத் தெரிவித்தனர்.

அத்துடன் இடைநிறுத்தப்பட்டிருக்கும் மின்சார வேலிக்கான மின் இணைப்பினை விரைவாக வழங்கி தங்கள் உயிரையும் பயிர்ரையும் பாதுகாக்க உதவ உரிய அதிகாரிகள் விரைவாக முன்வர வேண்டுமென குறித்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.