சர்வதேச மட்டத்தில் இலங்கை பொலிஸ் சேவையை உயர் மதிப்பினையுடைய சேவையாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
களுத்துறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மைத்திரிபால சிறிசேன இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,
“வளர்ச்சியடைந்த நாடுகளின் பொலிஸ் சேவையுடன் ஒப்பிடும்போது இலங்கை பொலிஸ் சேவையில் அதிகளவான மாற்றங்களை ஏற்படுத்த வேண்டிய தேவையுள்ளது.
அந்தவகையில் பொலிஸ் சேவை எனது கட்டுப்பாட்டுக்குள் வந்த பின்னர் வெற்றி பாதையை நோக்கி நகர ஆரம்பித்துள்ளது.
அதாவது நாட்டில் இதுவரைக்காலமும் சட்டம் மற்றும் ஒழுங்கு ஆகியவற்றை பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த பொலிஸ் சேவை, மக்களின் நலன் பேணல் சேவைகளில் நிறைவேற்றும் சிறப்பான மனித நேய பணிகளையும் மேற்கொள்கின்றது” என மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.