மாலத்தீவு நாடாளுமன்ற தேர்தல் – அதிபரின் கட்சி அமோக வெற்றி

424 0

மாலத்தீவு நாடாளுமன்ற தேர்தல் முன்னாள் அதிபர் முகமது நஷீத் மற்றும் தற்போதைய அதிபர் முகமது சோலி ஆகியோரின் எம்.டி.பி. கட்சி அமோக வெற்றிப்பெற்றது. 

இந்திய பெருங்கடலில் உள்ள பல சிறிய தீவுகளால் ஆன நாடு மாலத்தீவு. அங்கு நீண்டகால ராணுவ ஆட்சிக்கு பிறகு கடந்த 2008-ம் ஜனநாயக முறைப்படி அதிபர் தேர்தல் நடந்தது. இதில் மாலத்தீவு ஜனநாயக கட்சியின் (எம்.டி.பி.) தலைவர் முகமது நஷீத் வெற்றிப்பெற்று அதிபரானார்.

ஆனால், பொதுமக்கள் போராட்டம் மற்றும் ராணுவ நெருக்கடி காரணமாக பதவி காலம் முடியும் முன்னரே 2012-ம் ஆண்டு அதிபர் பதவியை ராஜினாமா செய்தார்.

அதன்பின்னர் 2013-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் முற்போக்கு கட்சியை சேர்ந்த அப்துல்லா யாமீன் வெற்றிப்பெற்று அதிபரானார்.

இவரது ஆட்சிக்காலத்தில் சர்ச்சைக்குரிய பயங்கரவாத தொடர்பு புகாரில் முன்னாள் அதிபர் முகமது நஷீத் 2016-ம் ஆண்டு வலுக்கட்டாயமாக நாட்டை விட்டு வெளியேறப்பட்டார்.

இதற்கிடையில், கடந்த ஆண்டு அங்கு மீண்டும் அதிபர் தேர்தல் நடந்தது. இதில் அப்துல்லா யாமீன் 2-வது முறையாக அதிபர் பதவிக்கு போட்டியிட்டார்.

அவரை எதிர்த்து எம்.டி.பி. கட்சியின் துணைத் தலைவர் முகமது சோலி களம் இறங்கினார். இதில் யாரும் எதிர்பாராதவிதமாக முகமது சோலி அமோக வெற்றிப்பெற்றார். அவர் அதிபராக பதவி ஏற்றுக்கொண்டதும், முகமது நஷீத் நாடு திரும்பினார்.

இந்த நிலையில், 87 இடங்களை கொண்ட மாலத்தீவு நாடாளுமன்றத்துக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது. மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் தங்களது ஜனநாயக கடைமையை ஆற்றினார்கள்.

இதனால் தேர்தலில் விறு விறுப்பான வாக்குப்பதிவு நடந்தது. 70 முதல் 80 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

வாக்குப்பதிவு முடிந்ததும் உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டன. இந்த தேர்தலில் முன்னாள் அதிபர் முகமது நஷீத் மற்றும் தற்போதைய அதிபர் முகமது சோலி ஆகியோரின் எம்.டி.பி. கட்சி மற்றும் மற்றொரு முன்னாள் அதிபரின் அப்துல்லா யாமீனின் முற்போக்கு கட்சி ஆகியவற்றுக்கு இடையே பலத்த போட்டி நிலவியது.

ஆனால் எம்.டி.பி. கட்சி 3-ல் 2 பங்கு இடங்களை கைப்பற்றி அமோக வெற்றிப்பெற்றது. அதவாது முதற்கட்ட தேர்தல் முடிவுகளின்படி மொத்தம் உள்ள 87 இடங்களில் 50 இடங்களில் எம்.டி.பி. கட்சி வேட்பாளர்கள் வெற்றிவாகை சூடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதே சமயம் அந்நாட்டு ஊடகங்கள் எம்.டி.பி. கட்சி 68 இடங்களில் வெற்றிப்பெற்றதாக செய்திகள் வெளியிட்டன. இறுதி முடிவுகள் வெளிவந்த பின்னரே இது உண்மையா என்பது தெரியவரும்.

தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் அதிபர் முகமது நஷீத் “இந்த முடிவுகள் மாலத் தீவில் ஜனநாயகத்தை உறுதிப் படுத்த வழி வகுக்கும்” என கூறினார்.