ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் அடுத்தடுத்து நிகழ்த்திய 2 குண்டு வெடிப்பு தாக்குதலில் 3 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.
ஆப்கானிஸ்தானில் 2001-ம் ஆண்டு முதல் நடந்து வருகிற உள்நாட்டுப்போரை பயன்படுத்தி, அங்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் கால் பதித்து ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினர்.
அங்குள்ள நங்கர்ஹார் மாகாணத்தில் 2015-ம் ஆண்டு முதல் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆதிக்கம் இருந்து வருகிறது. பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களை அவர்கள் அங்கு நடத்தி வந்துள்ளனர்.
இந்தநிலையில் அந்த மாகாணத்தின் தலைநகரான ஜலாலாபாத் நகரில் நேற்று அடுத்தடுத்து 2 குண்டு வெடிப்புகளை பயங்கரவாதிகள் நடத்தினர். இந்த குண்டுவெடிப்புகளால் ஜலாலாபாத் நகரம் அதிர்ந்தது. இவற்றில் சிக்கி 3 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 19 பேர் படுகாயம் அடைந்தனர்.
தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்று சுற்றி வளைத்தனர். படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்சுகளில் அனுப்பி வைத்தனர்.
இந்த குண்டுவெடிப்புகளுக்கு எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை