ஏழைகளுக்கு கொடுப்பதை தடுக்கும் கட்சி திமுக – எடப்பாடி பழனிச்சாமி

258 0

எப்போதும் ஏழைகளுக்கு கொடுப்பதை தடுக்கும் கட்சியாக திமுக உள்ளது என்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். 

கரூர் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் தம்பி துரையை ஆதரித்து வேடசந்தூரில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் பதவியில் இருக்கும் போது விவசாயிகளைப் பற்றி நினைத்தது கிடையாது. காவிரி நதி நீர் பங்கீட்டிலும் எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. மறைந்த முதல்வர் ஜெயலலிதாதான் உச்சநீதிமன்றத்துக்கு சென்று தமிழக உரிமையை நிலை நாட்டினார்.

தமிழகத்தைச் சேர்ந்த நிதி அமைச்சர் சிதம்பரம் பதவியில் இருந்தபோது நமது மாநிலத்துக்கு எந்த நிதியும் ஒதுக்கவில்லை. நீர் மேலாண்மை திட்டமும் செயல்படுத்தவில்லை. தொடர்ந்து தமிழகத்தை புறக்கணித்தே வந்தார்.

தேர்தல் சமயங்களில் மட்டும் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ஓட்டு கேட்க வருகிறார்கள். மேலும் காங்கிரஸ் வேட்பாளர்கள் ஒரே தொகுதியில் நின்றால் மக்கள் கேள்வி கேட்பார்கள் என்பதால் ஒவ்வொரு தேர்தலுக்கும் வேறு வேறு தொகுதியில் நிற்கின்றனர்.

பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசுவதற்கு தி.மு.க.வினருக்கு அருகதை கிடையாது. இவர்களாலேயே பெண்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படுகிறது. அழகுநிலையத்தில் புகுந்து பெண்ணை தாக்குகின்றனர். ரெயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். மேலும் பிரியாணி உள்பட அனைத்து கடைகளுக்குள்ளும் சென்று சாப்பிட்டு விட்டு பணம் கேட்டால் உரிமையாளர்களை தாக்குகின்றனர்.

மறுநாள் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கட்டப்பஞ்சாயத்து செய்ய செல்கிறார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழியில் நடக்கும் இந்த அரசு நீர் மேலாண்மை திட்டங்களை திறம்பட செயல்படுத்தி வருகிறது. பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முதல் குரலாக கோதாவரி, காவிரி நதி நீர் இணைப்பு திட்டம் நிறைவேற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படும். அதன் பின்னர் வறட்சி மாவட்டங்கள், ஏரி-குளங்கள் நிரப்பப்படும். அத்திக்கடவு-அவினாசி திட்டம் தொடங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

ஏழை மக்களுக்கு பொங்கல் பரிசாக அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் கட்சி பாகுபாடின்றி ரூ.1000 வழங்கப்பட்டது. மேலும் அனைத்து தொழிலாளர்களுக்கும் ரூ.2000 வழங்க அரசு ஏற்பாடு செய்தது. ஆனால் தி.மு.க. இந்த ரூபாயை கொடுப்பதற்கு தடை செய்ய கோரி கோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளது. எப்போதும் ஏழைகளுக்கு கொடுப்பதை தடுக்கும் கட்சியாக தி.மு.க. உள்ளது.

தி.மு.க. தேர்தல் அறிக்கை பொய்யானது. விவசாயிகளுக்காக எந்த நன்மையும் செய்யவில்லை. மத்திய அமைச்சரவையில் பங்கு வகித்தபோதும் தமிழகத்துக்கான நலத்திட்டங்களை கேட்டுப் பெறவில்லை.

ஆனால் தம்பிதுரை அனுபவம் வாய்ந்தவர். மீண்டும் உங்களிடம் குறைகளை கேட்க வந்துள்ளார். குஜிலியம்பாறை தனி தாலுகாவாக மாற்றப்பட்டது. அங்கு தீயணைப்பு நிலையம் செயல்பட உள்ளது. வேடசந்தூர், வடமதுரையில் புதிய பஸ்நிலையம் திறக்கப்படும். எனவே இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.