நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, நிதிமோசடி எதிர் காவல்துறை விசாரணைப் பிரிவிடம் 20 கோடி ரூபாவினை நட்டஈடாக கோரி, கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கொன்றை தாக்கல் செய்துள்ளார்.
கிறிஸ் ஒப்பந்தம் தொடர்பில், உரிய விசாரணை மேற்கொள்ளாமல் கைது செய்து, தம்மை விளக்கமறியலில் வைத்ததன் ஊடாக தமது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டதாக தெரிவித்தே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமக்கு ஏற்பட்டுள்ள இந்த பாதிப்புக்கு நிதிமோசடி எதிர் காவல்துறை விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி ஆர்.ஏ.கே. பிரேமரட்னவிடமும் காவல்துறை பரிசோதகர் ஷாந்த லாலிடமும் தலா 10 கோடி ரூபா நட்டஈடு கோரி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஒன்றிணைந்த எதிர்கட்சியை பிரதிநிதித்துவப் படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் லோஹான் ரத்வத்தையும் இன்று நிதிமோசடி எதிர் காவல்துறை விசாரணைப் பிரிவில் முன்னிலையானார்.
இவரின் மேற்பார்வையின் கீழ் இருந்த மகிந்த ராஜபக்ச விளையாட்டு அமைப்பின் ஊடாக தியகம பிரதேசத்தில் விளையாட்டு தொகுதி நிர்மாணித்தின் போது இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளவே அவர் அழைக்கப்பட்டார்.