இஸ்லாமிய நாடுகள் மத்தியில் பாகிஸ்தானை தனிமைப்படுத்துவதில் இந்தியா வெற்றி கண்டுள்ளதாக சுஷ்மா சுவராஜ் பேசினார்.
பயங்கரவாத தாக்குதல்களுக்கு பிறகு, பாகிஸ்தானை முஸ்லீம் நாடுகள் மத்தியில் இருந்தும் தனிமைப்படுத்தும் முயற்சியில் இந்தியா வெற்றி கண்டு உள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார். ஐதராபாத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சுஷ்மா சுவராஜ் இந்த தகவலை வெளியிட்டார்.
மேலும், இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பின் முதல் மாநாடு 1969 ஆம் ஆண்டு நடைபெற்றது. இதில் இந்தியா கலந்துகொண்ட போது, பாகிஸ்தான் கொடுத்த அழுத்தத்தால், அதன் பின்பு இந்தியாவுக்கு அழைப்பு விடுக்கவில்லை. ஆனால், இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகளின் 50 ஆண்டு கூட்டத்தில், பாகிஸ்தானின் அழுத்தத்தையும் தாண்டி இந்தியாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் அதன்பேரில் இந்தியா கலந்து கொண்டது. இஸ்லாமிய நாடுகளுடான இந்தியாவின் உறவை மோடி வலுவாக்கியுள்ளார். மோடியின் வெளிநாட்டு பயணத்துக்கு கிடைத்த வெற்றி இதுவாகும்” என்றார்.
தொடர்ந்து ராகுல் காந்தியை விமர்சித்து பேசிய சுஷ்மா சுவராஜ் கூறியதாவது:- “ராகுல் காந்தி பேட்டியின் போது, நாட்டில் மிகப்பெரும் பிரச்சனையாக உள்ளது வேலையின்மை தான், பயங்கரவாதம் இல்லை என கூறினார். அவர் கூறுவதை போல், நாட்டில் பயங்கரவாதம் ஒரு பிரச்சனை இல்லை என்றாலும், அனைத்து பயங்கரவாதமும் முழுமையாக செயலிழந்து விட்டது என்றாலும், ராகுலுக்கு சிறப்பு பாதுகாப்பு குழுவின் பாதுகாவலர்கள் எதற்கு?
முன்னாள் பிரதமரும், ராகுல் காந்தியின் தந்தையும் ஆன ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டது முதல், இன்று வரை அவரது குடும்பத்தில் அனைவருக்கும் சிறப்பு பாதுகாப்பு குழுவின் பாதுகாவலர்கள், எங்கு சென்றாலும் வருகின்றனர். மேலும் ராகுல் காந்தி செல்லும் அனைத்து இடங்களுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது.
எனவே இதனை ராகுலிடம் கூற விரும்புகிறேன். பயங்கரவாதம் அழிந்து விட்டதாக எண்ணிக் கொண்டிருக்கும் நீங்கள், எவ்வித பாதுகாப்பும் தேவையில்லை என கருதினால் உடனடியாக ‘எங்களின் பாதுகாப்பிற்கென சிறப்பு பாதுகாப்பு குழுவின் பாதுகாவலர்கள் வேண்டாம்’ என எழுதி தந்து விடுங்கள்” என்றார்.