யாழ் மாவட்ட முஸ்லீம் மக்களின் மீள் குடியேற்றத்திற்கு சொல்லக்கூடிய அளவில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பங்களிப்பு வழங்கவில்லை எனவும் அவர்கள் தொடர்ந்தும் ஏமாற்றுவதாக முன்னாள் யாழ் மாநகர சபை உறுப்பினர் பி.எஸ்.எம் சுபியான் மௌலவி குற்றம் சாட்டியுள்ளார்.
யாழ் மாவட்ட முஸ்லீம் வெளியேற்றப்பட்டு எதிர்வரும் ஓக்டோபர் 30 ஆம் திகதி 26 வருடங்கள் நிறைவடைவது தொடர்பாகவும் அம் மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பாகவும் எமக்கு வழங்கி விசேட செவ்வியில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கூறுகையில்
வட மாகாண முஸ்லீம் மக்கள் தொடர்பாக கூட்டமைப்பின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் அவ்வப்போது கருத்துக்களை கூறி வருகின்றனர்.
அது வெறும் வார்த்தைகளாகவே இருக்கின்றன.
இவ்வாறே தான் எமது மக்களின் மீள் குடியேற்றத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்களிப்பு என்பது போதிய அளவில் இல்லை.
இதில் அக்கறை இன்றி தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இருப்பது மிக வேதனையாக இருக்கின்றது.
ஏனெனில் 1990 ஆண்டு யாழ் முஸ்லீம்கள் விடுதலை புலிகளினால் வெளியேற்றப்பட இருந்த காலத்திலும் கூட அம்மக்கள் தமிழ் தேசிய தலைமை கட்சிகளுக்கு தான் தமது ஆதரவினை வழங்கி ஒத்துழைத்தார்கள்.
இந்நிலையில் மீண்டும் (இன்று) சொந்த இடத்தில் தற்போது மீள் குடியேற வந்துள்ள முஸ்லீம் மக்களை வரவேற்று வாழ வைப்பதென்பது தமிழ் அரசியல் தலைவர்களிற்கு பொறுப்பு உள்ளது.
ஆனால் தற்போது நடப்பது என்ன?வடக்கு மாகாண சபையை தமிழ் தேசிய கூட்டமைப்பு பெரும்பான்மை ஆசனங்களுடன் கைப்பற்றி ஆட்சி அமைத்துள்ளது.
அதன் போது அச்சபைக்கு தெரிவு செய்யப்பட்ட அரசியல் தலைவர்கள் என சொல்லப்படுபவர்கள் யாழ் முஸ்லீம் மக்கள் தொடர்பில் அக்கறையுடன் பல கருத்துக்களை கூறியிருந்தனர்.
ஆனால் வட மாகாண சபை கூட்டமைப்பினால் கைப்பற்றப்பட்ட பின்னர் சம்பிரதாய பூர்வமாக சமயத்தலங்களிற்கு அன்று விஜயம் செய்தனர்.
இதன் போது யாழ் முஸ்லீம் மக்கள் செறிந்து வாழும் பள்ளிவாசல் ஒன்றிற்கும் வருகை தந்தனர்.
அந்த நேரத்தில் பள்ளிவாசலில் ஒன்று கூடி நின்ற முஸ்லீம் மக்களிடத்தில் அங்கு வந்த வடக்கு மாகாண சபை முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன்இபாராளுமன்ற உறுப்பினரும் தற்போதைய எதிர்கட்சித்தலைவருமான இரா .சம்பந்தன்இபாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாஇ உள்ளிட்டோர் பல வாக்குறுதிகளை வழங்கினர்.
இந்த வாக்குறுதி வழங்கும் போது கூட்டமைப்பின் சார்பாக தேசிய பட்டியல் மூலம் தெரிவான முஸ்லீம் மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீன் என்பவரும் உடனிருந்தார்.
இந்த உறுதி மொழி வழங்கும் போது மேற் கூறிய தலைவர்கள் எங்களது ஆட்சி தற்போது வந்து விட்டது.உங்களை(யாழ் முஸ்லீம்கள்) சொந்த இடங்களில் மீள் குடியேற்ற முழுக்கவனமும் செலுத்தவுள்ளோம்.அத்துடன் அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து வைக்கும் பொறுப்பு இருப்பதாக கூறி சென்றிருந்தனர்.
ஆனால் இரண்டு அரை வருடம் கடந்துவிட்டது. வடக்கு மாகாண சபையினால் எமது மக்களிற்கு என்ன நடந்துள்ளது என நினைத்துக்கொண்டு அதனை மீள ஞாபகப்படுத்த நானும் எனது குழுவினரும் முதலமைச்சரை சந்திப்பதற்காக அவரது வாசஸ்தலத்திற்கு சென்றோம்.
அங்கு முஸ்லீம் மக்களிற்கு ஏற்கனவே அவர்கள் கூறிய வாக்குறுதிகளை நினைவு படுத்தி உடனடியாக செய்ய வேண்டும் என வலியுறுத்தினோம்.அப்போது முதலமைச்சரும் உறுதியாக செய்து முடிப்பதாக கூறினார்.
ஆனால் இன்னும் ஒன்றுமே நடைபெறவில்லை.
ஆயினும் இன்று வடக்கு மாகாண சபை யாழ் முஸ்லீம்களின் மீள் குடியேற்றத்திற்கு உதவி செய்வதான ஒரு மாயையை கூட்டமைப்பின் ஊடாக தேசிய பட்டியல் மூலமாக தெரிவு செய்யப்பட்ட மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீன் மேற்கொண்டு வருகின்றார்.
அவர் வடக்கு மாகாண சபை அவருக்கு ஒதுக்கிய பன்முகப்படுத்தப்பட்ட நிதி மூலத்தை கொண்டு கூடுதலான நிதியினை யாழ் மாவட்டத்திற்கு ஒதுக்கி செலவழிக்கின்றார்.
இவ்வாறு மாகாண சபையினால் அவருக்கு ஒதுக்கப்படுகின்ற 60 இலட்சம் ரூபா நிதியை கொண்டு சில உதவிகளை செய்து விட்டு அதனை செய்தியாக மீண்டும் மீண்டும் பிரசுரித்து அதிகளவான உதவிகள் என வெளிக்காட்ட முயல்கின்றார்.
இந்த நிதி மூலம் வாழ்வாதாரத்துடன் சம்பந்தப்பட்ட உதவிகள் செய்வதாகவே அந்த செய்திகளில் அடிக்கடி சொல்லப்படுகின்றது.
நான் அறிந்த மட்டில் அந்த நிதியில் மாகாண சபை உறுப்பினர் வழங்குவது குறைவு.செய்தியாக வெளியிடுவது அதிகம்.இதனால் அந்த செய்தி மூலம் வெளி உலகிற்கு தான் அதிகமாக முஸ்லீம்களிற்கு உதவுவதாக கூற முற்படுகின்றார்.
இந்த விடயத்தை பார்க்கும் வெளி உலக மக்களும் மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீன் யாழ் முஸ்லீம் மக்களிற்கு அதிகமாக உதவுகின்றார் என்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றது.ஆனால் இவ்விடயம் உண்மையல்ல.
எனவே மேற் சொன்ன மாகாண சபை உறுப்பினரின் பன்முகப்படுத்தப்பட்ட வாழ்வாதார உதவி என்பது மீள்குடியேறிய அல்லது மீள் குடியேறவுள்ள முஸ்லீம் மக்களிற்கு முற்று முழுதான பாரிய வேலைத்திட்டமாக கருத முடியாது.
ஆகவே இந்த விடயங்களை இஉதவித்திட்டங்களை வைத்துக் கொண்டு வடக்கு மாகாண சபை யாழ் முஸ்லீம்களின் மீள்குடியேற்றத்திற்கு உதவுகின்றது அல்லது தமிழ் தேசிய கூட்டமைப்பு உதவுகின்றது என யாரேனும் சொல்வார்களே ஆனால் அது நிச்சயமாக யாழ் முஸ்லீம் மக்களை ஏமாற்றுவதாகவே கருத வேண்டியுள்ளது என அவர் மேலும் கூறினார்.