கிருஷ்ணர் குறித்து திராவிட கழக தலைவர் கி. வீரமணி பேசியது உண்மை என்றால், அது தவறுதான் என முக ஸ்டாலின் இன்று செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
இந்து மத கடவுள் கிருஷ்ணர் குறித்து திராவிடர் கழக தலைவர் வீரமணி பேசிய சர்ச்சை கருத்துக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனை கண்டித்து பிராமணர் சங்கம், இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இது குறித்து பராசக்தி படத்தில் இடம்பெற்ற கலைஞரின் வசனத்தை மேற்கோள் காட்டி ஸ்டாலின் செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
கி. வீரமணி விவகாரத்தில் ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இயக்கங்கள் சதி செய்து, திரித்து பரப்புகின்றன. கிருஷ்ணர் குறித்து திராவிட கழக தலைவர் கி. வீரமணி பேசியது உண்மையாக இருந்தால் அது தவறு தான். கிருஷ்ணர் குறித்து மேற்கோள் காட்டிதான் பேசினாரே தவிர, உள்நோக்கத்துடன் கூறவில்லை. மேலும் கி. வீரமணி, கிருஷ்ணர் குறித்து பேசியது பெரியார் திடலில் தானே தவிர, தேர்தல் பிரசார கூட்டத்தில் அல்ல.
மேலும் இதுவரை 30 தொகுதிகளில் நான் தேர்தலுக்கென பிரசாரத்தில் ஈடுபட்டபோது, அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி மீதும் மத்தியில் ஆளும் பாஜகவின் மோடி அரசின் மீதும் உள்ள மக்களின் வெறுப்பு எனக்கு தெரிந்தது. அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் இந்த மத்திய மற்றும் மாநில ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.