விவசாயிகள் நலன் காக்க எந்த தியாகமும் செய்ய தயார்- எடப்பாடி பழனிசாமி

361 0

விவசாயிகள் நலன் பெற எந்த தியாகத்தையும் செய்ய அ.தி.மு.க. அரசு தயாராக உள்ளது என்று தேர்தல் பிரசாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். 

மதுரை மாவட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று 2-வது நாளாக தேர்தல் பிரசாரம் செய்தார்.

இன்று காலை மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் தேனி பாராளுமன்ற அ.தி.மு.க. வேட்பாளர் ரவீந்திரநாத் குமாரை ஆதரித்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம் செய்தார்.

அம்மாவின் அரசு விவசாய மக்களுக்கு தேவையான நல்ல திட்டங்களை தந்து வருகிறது. தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் பொய்யான வாக்குறுதிகளை மக்களிடம் கொடுத்து வருகிறார். ஜெயலலிதா கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு விட்டது. அதுபோல இப்போது நாங்களும் சொல்கிற திட்டங்களை நிச்சயம் செய்து முடிப்போம்.

உலக பாரம்பரியம் மிக்க ஜல்லிக்கட்டை மீட்டு தந்தது அ.தி.மு.க. அரசு. அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நினைவு சின்னம் அமைக்க கோரிக்கை வைத்துள்ளீர்கள். உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும். நானும் ஒரு விவசாயி என்ற முறையில் சொல்கிறேன். விவசாயிகள் வாழ்வு செழிக்க இந்த அரசு தக்க நடவடிக்கை எடுக்கும். சாத்தையாறு அணை மராமத்து பணிக்கு ரூ.3½ கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் பணி தொடங்கும்.

முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக தேக்க சட்ட போராட்டம் நடத்தி வெற்றி கண்டவர் ஜெயலலிதா. அவரது வழியில் செயல்படும் இந்த அரசு முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதற்காக ரூ.7½ கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அணையை மேலும் பலப்படுத்தும் பணிகள் நடத்தப்படுகிறது. அணையை பலப்படுத்தும் பணிக்கு கேரள அரசு அனுமதி அளிக்க மறுத்து வருகிறது. 2 படகுகளில் பொருட்கள் கொண்டு செல்ல அனுமதி கேட்டோம். ஒரு படகுக்கு மட்டுமே அனுமதி தந்துள்ளனர்.

அணைக்கு செல்லும் வழியில் உள்ள மரங்களை அகற்றவும் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே விவசாயிகள் நலன் பெற எந்த தியாகத்தையும் செய்ய அ.தி.மு.க. அரசு தயாராக உள்ளது.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.