இலங்கையுடன் நீண்டகால ஒத்துழைப்பு செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் பாக்கிஸ்தான் தற்போது அவற்றை மேலும் மேம்படுத்துவதற்கு புதிய வாய்ப்புக்களை நாடுவதாக கொழும்பிலுள்ள பாக்கிஸ்தான் தூதரகம் தெரிவித்திருக்கிறது.
புதிதாக நிறுவப்பட்டிருக்கும் இலங்கை இராணுவத்தின் அமைதி காக்கும் பயிற்சி நிலையத்திற்கு பாக்கிஸ்தான் அரசாங்கம், அதன் கொழும்பு தூதரகத்தின் ஊடாக 15 கணினிகளையும், அச்சியந்திரங்களையும் அன்பளிப்புச் செய்துள்ளது.
குறித்த நிகழ்வில் அங்கு உரை நிகழ்த்திய பாக்கிஸ்தான் தூதுவர்,
ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் நடவடிக்கைகளில் இலங்கை ஆயுதப்படைகளின் பாத்திரம் குறித்துப் பாராட்டுத் தெரிவித்தார். காலத்தின் சோதனைக்குத் தாக்குப்பிடித்து பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையில் இலங்கைக்கும், பாக்கிஸ்தானுக்கும் இடையில் நிலவிவரும் நெருக்கமான உறவுகள் குறித்து விளக்கிக்கூறிய தூதுவர் அடுத்துவரும் வருடங்களில் ஒத்துழைப்புக்கான வாய்ப்புக்களையும், வழிமுறைகளையும் கண்டறியும் முயற்சிகளை இரு நாடுகளும் ஆர்வத்துடன் தொடரும் என்று குறிப்பிட்டார்.