வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள யாழ் உள்ளிட்ட ஏனைய மாவட்டங்களுக்கு தலா பத்து இலட்சம் ரூபாய் நிதி வழங்கப்படவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
இந்த நிதி தொகை அந்தந்த மாவட்ட அரசாங்க அதிபர்களிடம் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாட்டில் தற்போது நிலவுகின்ற வரட்சியான காலநிலையின் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் நீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அதே போன்று சில பிரதேசங்களில் காடுகளில் தீப்பரவல் ஏற்படுகின்றது. அவ்வாறான பிரதேசங்களுக்கு 13 பவுசர்களில் நீர் வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. அதற்கு தேவையான நிதி அந்த மாவட்ட அரசாங்க அதிபர் திணைக்களங்களுக்கு வழங்கப்படவுள்ளன.
யாழ்ப்பாண மாவட்டத்திற்கு 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதோடு, ஏனைய மாவட்டங்களுக்கும் அந்தந்த மாவட்ட அரசாங்க அதிபர்களிடம் தலா பத்து இலட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது. இது வரையில் பாதிக்கப்பட்டுள்ள சகல மாவட்டங்களுக்கும் 207 தண்ணீர் பவுசர்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறான திடீர் அனர்த்தங்களுக்கு ஏற்படும் போது பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக முப்படையினர் சகல மாவட்டங்களிலும் பணியிலமர்த்தப்பட்டுள்ளனர்.
விஷேடமாக விமானப்படை மூலம் திடீர் தீப்பரவல் இடம்பெறுகின்ற பிரதேசங்களுக்கு தேவையான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அத்தோடு 117 என்ற அவசர தொலைபேசி சேவைக்கு அழைப்பினை ஏற்படுத்துவதன் மூலம் தேவையான உதவிகளை பொது மக்கள் பெற்றுக்கொள்ள முடியும் என்றார்.