இலங்கையின் வடக்குப் பகுதியில் நடைபெற்றுவரும் மீன்பிடித் தொழிற்றுறை, பாரிய சவால்களை எதிர்நோக்குகின்றது.
குறிப்பாக, அவை இரண்டு சவால்களை எதிர்கொள்கின்றன. முதலாவது, இந்திய இழுவைப் படகுகள் சட்டவிரோதமான முறையில் இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுவதும் எம்மவர்களின் வலைகளைச் சேதமாக்குவதும் பிரதானமானவை.
இரண்டாவது, வெளிமாவட்ட மீனவர்கள், வடக்கில் வாடிகளை அமைத்து, மீன்பிடிப்பதன் ஊடு, உள்ளூர் மீனவர்களின் மீன்பிடியும் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகின்றன. இவை இரண்டும் எமது அரசியல்வாதிகளின் கவனத்தை எட்டவில்லை; அதற்கான காரணங்கள் பல.
இந்திய இழுவைப் படகுகளின் வருகை, மிகப்பாரிய சேதத்தை இலங்கையின் கடல் வளத்துக்கும் மீனவர்களுக்கும் தொடர்ந்தும் ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, இந்த இழுவைப் படகுகள் சர்வதேச ரீதியாகத் தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறையான, ‘அடியோடு அள்ளுதல்’ என்ற முறையைப் பயன்படுத்தி, மீன்களைப் பிடிக்கிறார்கள்.
இம்முறையானது, கடலின் அடிப்படுக்கையோடு சேர்த்து, கடலில் உள்ள அனைத்தையும் அள்ளுவதாகும். இம்முறையால், முழுக் கடல்வளமும் அதன் சமநிலையும் பாதிக்கப்படுவதோடு, மீன்குஞ்சுகளும் கடலடி உயிரினங்களும் தாவரங்களும் சேர்த்தே அள்ளப்பட்டு, அள்ளப்பட்ட பிரதேசம் வெறுமையாகிறது. இதன்மூலம் அப்பகுதியில் எதிர்காலத்தில் மீன்வளம் உருவாவதற்கான வாய்ப்புகள் முழுமையாக இல்லாமல் போகின்றன.
இந்தியப் படகுகளின் அத்துமீறிய மீன்பிடி, நிகழ்காலப் பிரச்சினை மட்டுமல்ல, வடபகுதி மீன்பிடியின் எதிர்காலம் பற்றியதுமாகும்.
இவை எல்லோருக்கும் தெரிந்துள்ள உண்மைகளாகும். இதைத் தீர்க்கும் முக்கிய பொறுப்பு, இரண்டு நாடுகளுடைய அரசாங்கங்களுக்கும் உள்ளது. இப்பிரச்சினை தொடங்கிப் பல ஆண்டுகளாகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
போரின் பெயரில், வடபுல மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் மறிக்கப்பட்ட இரண்டு தசாப்த காலத்தில், அவர்களுடைய குடும்பங்கள் பட்ட அல்லல்களை அவர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.
இந்தச் சூழ்நிலையிலேயே, தென்னிந்திய மீன்பிடிப் பெருமுதலாளிகள் வடபுலக் கடற் பிரதேசத்தைத் தமக்கு வாய்ப்பாக்கிக் கொண்டார்கள். இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தவரை, வடபுல மீனவர்கள் பட்டினியில் இறந்தாலும் அது கவலைப்பட்டிராது. விடுதலைப் புலிகளுக்கு எதிராக, அதற்கு இந்திய மத்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்பு தேவைப்பட்டது. எனவே, இந்தியப் பெரும் படகுகளின் ஊடுருவல் கண்டுங் காணாமல் விடப்பட்டது.
எவ்வாறாயினும், இன்று வடபுலத்த மீனவர்கள் எதிர் கொள்ளும் வாழ்வாதாரப் பிரச்சினைக்குத் துரிதமான, நியாயமான, நீடித்து நிலைத்திருக்கக் கூடிய தீர்வு தேவை.
அவர்களைப் பொறுத்தவரை, அவர்களுடைய வாழ்க்கையையும் தமது சிறு படகுகளையும் மரபுவழிக் கருவிகளையும் தொழிலையும் இடையூறின்றிக் கொண்டு நடத்துவது முக்கியமானது.
இதில் முக்கியமானது, இலங்கை மீனவர்களின் எதிரிகள், தமிழகத்தின் ஏழை மீனவர்களல்ல. வயிற்றுப் பிழைப்புக்காக அவர்கள் தமது சிறு படகுகளையும் மரபுவழிக் கருவிகளையும் பாவிப்பதையிட்டு இலங்கை மீனவர்கள் சினக்கப் போவதில்லை. மீன் முதலாளிகளின் பெரும் இழுவைப் படகுகளின் செயற்பாடே மீனவர்களின் கவலைக்குரியது.
அதேவேளை, இலங்கைக் கடற்பரப்புக்குள் இலங்கை அரசாங்கத்தின் உடன்பாடின்றிப் படகுகளும் கப்பல்களும் நுழைவது, ஓர் அத்துமீறல் மட்டுமல்ல, ஓர் எல்லைக்கப்பால் ஆக்கிரமிக்கும் செயலும் ஆகும்.
இப்பிரச்சினையில் தமிழ் அரசியல் தலைமைகளின் நிலைப்பாடென்ன என்ற வினாவுக்கான சரியான பதில் இன்றுவரை கிடைக்கவில்லை.
வடபுலத்து மீன்பிடித்துறை எதிர்நோக்கும் அடுத்த சவால், வெளிமாவட்ட மீனவர்கள் பெருந்தொகையில், வாடிகளை அமைத்துத் தங்கியிருந்து, மீன்பிடியில் ஈடுபட்டு வருவதும், தடை செய்யப்பட்ட மீன்பிடி வழிமுறைகளைச் சட்டவிரோதமாகப் பயன்படுத்துவதுமாகும்.
இவை நீண்டகால நோக்கில், நில அபகரிப்புக்கான முயற்சிகளாக மாறுகின்றன. இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பது முல்லைத்தீவு மீனவர்களே.
மீன்பிடி தொடர்பிலான அக்கறை, மீன்களைப் பிடிப்பதைத் தாண்டி, பல்வேறு சமூக அரசியல் பரிமாணங்களையும் உடையது. எல்லாவற்றிலும் பிரதானமான எமது சுற்றுச் சூழல் தொடர்பானது.
வடபுலத்து மீன்பிடி என்பது, வெறுமனே வாழ்வாதாரப் பிரச்சினை என்ற கட்டத்தைத் தாண்டி விட்டது. அது இன்று, இருப்புக்கும் நிலைப்புக்கும் எதிர்காலத்துக்குமான பிரச்சினையாகப் பரிணாம வளர்ச்சி கண்டுள்ளது.
இவை குறித்து, தமிழ் அரசியல் தலைமைகளின் கள்ளமௌனமே, இப்பிரச்சினைக்கான தீர்வின் பிரதான சவாலைக் காட்டி நிற்கின்றது.