346 பேரை பலி வாங்கிய விமான விபத்துகள்- போயிங் தலைமை செயல் அதிகாரி மன்னிப்பு கோரினார்

314 0

எத்தியோப்பியா மற்றும் இந்தோனேசியாவில் நடந்த விமான விபத்துகளில் 346 பேர் உயிரிழந்ததற்கு போயிங் நிறுவன தலைமை செயல் அதிகாரி மன்னிப்பு கோரினார். 

அடுத்தடுத்து விபத்து நேரிட்டு ஏராளமானோர் உயிரிழந்ததால், ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானங்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்தது. ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன், இந்தியா, சீனா, எத்தியோப்பியா, சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் போயிங் மேக்ஸ் ரக விமானங்கள் தரையிறக்கப்பட்டன. விமானங்களின் பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

அதேசமயம் போயிங் நிறுவனம் தனது 737 மேக்ஸ் ரக விமானத்தின் பாதுகாப்பு விஷயங்கள் குறித்து முழு நம்பிக்கையுடன் இருப்பதாக தெரிவித்தது. எனினும், விமான பாதுகாப்பு குறித்து பயணிகளுக்கு முழு உத்தரவாதமும் நம்பிக்கையும் அளிக்கும் பொருட்டு உலகம் முழுவதும் தனது மேக்ஸ் ரக விமானத்தின் இயக்கத்தை நிறுத்தி வைப்பதாக தெரிவித்தது. பின்னர் விமான விபத்துகளுக்கான காரணங்களை கண்டறிந்து, விமான பாதுகாப்பை மேம்படுத்தும் பணிகளை மேற்கொண்டது.

இந்நிலையில், நடந்த சம்பவத்திற்கு போயிங் நிறுவன தலைமை செயல் அதிகாரி டென்னிஸ் மிலன்பர்க் மன்னிப்பு கோரியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், போயிங் 737 ரக விமானங்கள் விபத்துக்குள்ளாகி உயிரிழப்பு ஏற்பட்டதற்கு போயிங் சார்பில் மன்னிப்பு கோருவதாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு விபத்துகளிலும் என்ன நடந்தது? என்பது குறித்த முழு விவரங்களும், அரசு அதிகாரிகள் விரைவில் வெளியிட உள்ள இறுதி அறிக்கையில் வெளியாகும் என்றும் டென்னிஸ் மிலன்பர்க் கூறியுள்ளார்.

எத்தியோப்பிய விபத்து குறித்து அரசு தனது முதற்கட்ட விசாரணை அறிக்கையை வெளியிட்ட நிலையில், போயிங் நிறுவன தலைமை செயல் அதிகாரி அறிக்கை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

புறப்படும்போது விமானம் நல்ல நிலையில் இருந்ததாகவும், விமானிகள் தங்களால் முடிந்தவரை சிறப்பாக செயல்பட்டும் விமானத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனதாகவும் எத்தியோப்பிய மந்திரி மோகஸ் கூறினார்.