இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்க சதி!

383 0

இடைத்தேர்தல் நடைபெறும் 18 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெற்றால், அ.தி.மு.க. ஆட்சி இருக்காது என்பதால் இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்க சதி நடக்கிறது என்று பொள்ளாச்சி பிரசார கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

பொள்ளாச்சி, 
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பேசியதாவது:-
வெற்றி
18-ந் தேதி நடைபெறக்கூடிய நாடாளுமன்றத் தேர்தல் என்பது, மத்தியில் நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய பாசிச மதவெறி பிடித்த ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும் என்பதற்காக நடைபெறுகின்ற தேர்தல். நடைபெற இருக்கக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் புதுச்சேரி உள்ளிட்ட 40-க்கு 40 இடங்களிலும், அதேபோல் தமிழகத்தில் நடைபெறக்கூடிய சட்டசபை இடைத்தேர்தல்களில் 18-க்கு 18 என்கின்ற மாபெரும் வெற்றியை நாம் பெறப் போகின்றோம்.

என்னுடைய முதல் தேர்தல் பிரசாரத்தை திருவாரூரில் தான் துவங்கினேன். திருவாரூரில் துவங்கி, இப்பொழுது இந்த பொள்ளாச்சிக்கு வந்திருக்கின்றேன். மற்ற தொகுதிகளில் ஏற்பட்டிருக்கக்கூடிய உணர்வென்பது வேறு, ஆனால், இந்தப் பொள்ளாச்சித் தொகுதிக்கு வருகின்ற நேரத்தில் ஏற்படுகின்ற உணர்வென்பது வேறாக அமைந்திருக்கின்றது. அது ஏன் என்பது உங்களுக்குத் தெரியும். பொள்ளாச்சியில் இருந்து வரக்கூடிய செய்திகள் அந்தக் கொடுமையான, அக்கிரமமான, நினைத்தே பார்க்க முடியாத அந்த செய்திகள் ஒருவிதமான மனத்துன்பத்தை எனக்கு ஏற்படுத்தியிருக்கின்றது. எத்தனையோ பிரச்சினைகளைப் பற்றிப் பேசும்பொழுது ஏற்படாத மனத்துன்பம், இந்த விவகாரத்தைப் பற்றிப் பேசுகின்ற பொழுது நம்மையே அறியாமல் வேதனைப் படுகின்றோம். ரத்தக் கண்ணீர் வடிக்கிறோம், மனம் ததும்புகின்றது.
நானும் ஒரு மகளைப் பெற்றவன் தான். நானும் ஒரு மகளுக்கு தந்தையாக இருக்கக் கூடியவன் தான். அதனால் தான் எனக்கு அந்த வருத்தம் மேலோங்கி நிற்கின்றது. எனக்கு மட்டுமல்ல பெண்ணை பெற்றெடுத்து இருக்கக்கூடிய பெற்றோர்கள் யாராக இருந்தாலும் இருக்கக்கூடிய உண்மை அது தான்.
ஆதாயம்
பொள்ளாச்சி விவகாரத்தை நான் அரசியலாக்க விரும்பவில்லை. எங்களின் கூட்டணி கட்சி தலைவர்களுடன் பேசுகின்ற பொழுது தெளிவாகச் சொன்னோம். இதை அரசியலாக்கக்கூடாது. இதில் ஆதாயம் தேட வேண்டிய அவசியம் இல்லை.
இந்த விவகாரத்தை நான் முதன்முதலில் ஏன் பேசினேன் என்று சொன்னால், சம்பந்தப்பட்டிருக்க கூடியவர்கள், இந்த கொடுமைகளுக்கு யார் துணை நின்று இருக்கின்றார்களோ அவர்கள் எல்லோரையும் தப்பிக்க வைக்கின்ற முயற்சியில் இந்த ஆட்சி ஈடுபடுகின்றது என்பதைக் கேள்விப்பட்டு தான், நான் தி.மு.க. தலைவர் என்று மட்டுமல்லாமல் எதிர்க்கட்சித்தலைவர் என்கின்ற முறையிலும் நான் விளக்கம் கேட்டு அறிக்கையை வெளியிட்டேன்.
ஆரம்பத்தில் இருந்தே இந்த விவகாரத்தை காவல்துறை திட்டமிட்டு மறைத்து இருக்கின்றது. சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரிப்பது இப்பொழுதும் கண் துடைப்புதான்.
ஒரு தந்தையாக இருந்து, 200-க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்டு இருக்கக் கூடிய பெண்களுக்கு செய்யப்பட்டு இருக்கக்கூடிய இந்த அநீதிக்கு நிச்சயமாக, வரக்கூடிய தி.மு.க. ஆட்சியின் மூலம் நீதி கிடைக்கும் என்ற அந்த உறுதியை நான் இந்தக்கூட்டத்தில் தெரிவிக்க விரும்புகின்றேன்.
சதி
வேலூர் நாடாளுமன்றத் தேர்தலை நிறுத்தக்கூடிய ஒரு சூழ்நிலை வருமா என்ற செய்தி வந்துள்ளது. அந்த நாடாளுமன்றத் தேர்தலை நிறுத்துகின்றபொழுது அந்தத் தொகுதிக்கு உட்பட்டு இருக்கக்கூடிய சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறக்கூடிய ஆம்பூர், குடியாத்தம் தொகுதி தேர்தல்களையும் நிறுத்த பார்க்கிறார்கள்.
எனவே, 18 தொகுதிகளில் தி.மு.க. வெற்றி பெற்று விட்டால் நாம் ஒரு நிமிடம் கூட ஆட்சியில் இருக்க முடியாது என்பது அவர்களுக்குத் தெரிந்துவிட்டது. எனவே அந்த எண்ணிக்கையை குறைக்க திட்டமிட்டு செய்திருக்கக்கூடிய சதி, அதற்கு தேர்தல் கமிஷன் உடந்தையாக இருக்கப் போகிறதா என்பதுதான் எங்களுக்கு கேள்வி.
சோதனை
காவல்துறை வாகனத்தையும் சோதனையிட வேண்டும். அதை சோதனையிடவில்லை என்று சொன்னால், நாங்கள் அல்ல இன்றைக்கு தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய வாக்காளர்களே வாகனத்தை வழிமறித்து சோதனையிட தயாராக இருக்கின்றார்கள். அப்படி ஒரு நிலைமை வரப்போகின்றது. அந்த நிலைக்கு எங்களை தேர்தல் ஆணையம் விடாது என்று நாங்கள் நம்புகின்றோம். அந்த நம்பிக்கைக்கு ஏற்றவகையில் நீங்கள் அதற்கு துணை நிற்க வேண்டும். ஜனநாயகத்தை பாதுகாத்திட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன்.
இவ்வாறு அவர் பேசினார்.