ஆட்சி அதிகாரம் என்பது சுற்றக்கூடியது என்றும் அது தங்கள் கைகளுக்கும் நிச்சயம் வரும் என்பதால் அதிகாரிகள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
திருச்சியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பேசியதாவது:-
தேர்தல் ஆணையம் என்பது நாட்டிற்கு தேவையான சுதந்திரமான அமைப்பு. அமெரிக்காவில் இல்லாத சுதந்திரம் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உள்ளது. படிப்பறிவு இல்லாத சமூகத்தில் தேர்தலை நடத்தி மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் ஜனநாயக மாண்பு இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உள்ளது. ஆனால் சென்ற முறையும், இந்த முறையும் தேர்தல் ஆணையம் கடுமையான தோல்வியை சந்தித்துள்ளது.
தேர்தலுக்கு முன் விவசாயிகள், வியாபாரிகள், ஏ.டி.எம்.களுக்கு எடுத்து செல்லும் பணம், பெண்கள் அணிந்து செல்லும் நகைகளை கைப்பற்றுவார்கள். ஆனால் தேர்தலுக்கு முதல் நாள், மறுநாள் கண்டுகொள்ள மாட்டார்கள்.
எதுவும் செய்யாமல் இருப்பதால் ஆளும் கட்சியினர் தெருவில் செல்பவர்களுக்கு கூட பணம் கொடுக்கிறார்கள். இதுதான் கடந்த சட்டமன்ற தேர்தலில் நடந்தது. இதனால் தான் இந்திய தேர்தல் ஆணையம் பரிதாபமாக தோற்றுப்போயுள்ளது என கூறுகிறேன். இந்த முறை அது நடக்கக்கூடாது.
தமிழகத்தில் துரைமுருகன் வீட்டில் மட்டுமே சோதனை நடக்கிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், சுகாதாரதுறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்தினீர்களா? அவர்களின் வீடுகளில் எவ்வளவு பணம் உள்ளது என்பது நாட்டிற்கே தெரியும்.
ஆனால் அங்கெல்லாம் சோதனை நடத்தாமல் துரைமுருகன் வீட்டில் சோதனை நடத்துவது, உங்களின் புகழையும் பெருமையையும் கெடுப்பது. அவரை தோல்வி அடைய செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் தேர்தல் ஆணையம், வருமான வரித்துறை செய்கிறது. இது நியாயமாகாது.
தேர்தல் ஆணையம் என்பது தன்னாட்சி அமைப்பு. யாருக்கும் கட்டுப்பட வேண்டிய அவசியம் இல்லை. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் என்ற முறையில் இந்திய தேர்தல் ஆணையத்தை எச்சரிக்கை செய்கிறேன். இதுபோன்ற ஒரு சார்பான நிலையை எடுத்தால் வருங்காலத்தில் இதற்கான பலனை அனுபவித்தே தீர வேண்டியது இருக்கும்.
அதிகாரம் என்பது சுற்றக்கூடியது. அது மோடி, எடப்பாடி கையில் மட்டும் இருந்து விடாது. அது எங்கள் கைகளுக்கும் நிச்சயம் வரும். எனவே அதிகாரிகள் கவனமாக நடந்து கொள்ள வேண்டும்.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் ஆண்டிற்கு ரூ.72 ஆயிரம் வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. மாதத்துக்கு ரூ.6 ஆயிரம் கொடுத்தால் ஏழைகள் வேலை செய்ய மாட்டார்கள் என்று பா.ஜ.க. கூறுகிறது. இது பிற்போக்கான மனநிலை. தேவையானவர்களுக்கு இலவசத்தை வழங்கியே தீர வேண்டும். அதைத்தான் காங்கிரஸ் கட்சி பேசுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.