அமைச்சர் வேலுமணி மீது ஊழல் வழக்கு தொடரப்படும் – முக ஸ்டாலின்

252 0

கோவையில் உள்ள தொண்டாமுத்தூரில் நடைபெற்ற பிரசாரத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், ஆட்சிக்கு வந்தப்பின் அமைச்சர் வேலுமணி மீது ஊழல் வழக்கு தொடரப்படும் என கூறியுள்ளார். 

கோவையில் உள்ள தொண்டாமுத்தூரில் நடைபெற்ற பிரசாரத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், ஆட்சிக்கு வந்தப்பின் அமைச்சர் வேலுமணி மீது ஊழல் வழக்கு தொடரப்படும் என கூறியுள்ளார். 

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று கோவையில்  உள்ள தொண்டாமுத்தூர் பகுதியில் வேனில் இருந்து பிரசாரத்தில் ஈடுபட்டு,  மக்களவை தொகுதி  திமுக வேட்பாளர் சண்முக சுந்தரத்தினை ஆதரித்து  பேசியதாவது:

இந்த கோவையைச் சேர்ந்தவர் தான் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி. உள்ளாட்சி துறை என்றாலே என்ன என்பது தெரியாதவராவார். நானும் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்துள்ளேன். மக்களை வழிநடத்தியுள்ளேன். ஆனால், இந்த துறையில் பல அக்கிரமங்களை வேலுமணி செய்திருக்கிறார். 

மேலும் உள்ளாட்சி அமைச்சராக இருந்தபோதிலும், அவரால் உள்ளாட்சி தேர்தலையே சரிவர நடத்த இயலவில்லை. அவருக்கு ஊழல் தான் நோக்கம். ஊழல் செய்வதில் அவர் தான் நம்பர் ஒன். ஊழலில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியையே மிஞ்சியவர். தமிழகத்திற்கு ஊழலிலே முதலிடம் வாங்கிக்கொடுத்தவர் இவர். இந்த ஊழல் ஆட்சி நிச்சயம் கவிழப்போகிறது. வருகின்ற தேர்தலில் இந்த ஆட்சி நிச்சயம் முடிவுக்கு வரும். 

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் வேலுமணி மேலே ஊழல் வழக்கு போடப்படும். ஊழலை விட மிகப்பெரிய துரோகம்,  பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை. குற்றவாளிகளை காப்பாற்றும் வகையிலே வேலுமணி மற்றும் அவரது கட்சி அமைச்சர்கள் வேலை செய்கின்றனர். கொடூரமாக பெண்களை சித்திரவதை செய்த பாவிகளை காப்பாற்றுகின்றனர். நிச்சயம் நமது கழக ஆட்சியிலே பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குறித்து சிபிஐ விரைவாக விசாரிக்கும்.

ஆனால், தலைவர் கலைஞர் ஆட்சியிலே,  பெண்களுக்கு வேலைவாய்ப்பில் சம உரிமை, சொத்துகளில் சம பங்கு, விதவைகள் மறு வாழ்வு திட்டம், மகளிர் சுய உதவி குழு திட்டம் என பல திட்டங்களை  கொண்டு வந்து பெண்களின் தரத்தினை உயர்த்தினார்.  உங்கள் வாக்குகளை நம் கழகத்தின் வேட்பாளராக இங்கு நிற்கும் சண்முக சுந்தரத்திற்கு, உதய சூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள். 

இவ்வாறு அவர் பேசினார்.