இலங்கையில் மீண்டும் மரண தண்டனையை அமுல்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ள நிலையில், அதற்கான ஆயத்தங்கள் தற்போது மும்முரமாக இடம்பெற்று வருகின்றன.
அந்தவகையில், தூக்கிலிட பயன்படுத்தும் தூக்குமேடையை அதிகாரிகள் நேற்று பரிசோதித்துள்ளனர். இதன்போது மணல் மூட்டையொன்றை தூக்கிலிட்டு பரிசீலித்துள்ளனர்.
நாட்டில் அதிகரிக்கும் குற்றச்செயல்களுக்கு போதைப்பொருளே காரணம் என தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, விமர்சனங்களை கடந்து தூக்குத்தண்டனையை நிறைவேற்றுவேன் என உறுதியாக குறிப்பிட்டுள்ளார்.
அந்தவகையில், முதற்கட்டமாக தூக்கிலிடப்படவுள்ளோரின் பட்டியல் தமக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், தற்போது தூக்குமேடை பரிசீலிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நிலையான சமாதானத்தை நோக்கி நகரும் இலங்கை, தூக்குத்தண்டனையை அமுல்படுத்தக்கூடாதென சர்வதேச மனித உரிமை அமைப்புகள் மற்றும் சமூகநல அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.