மத நல்லிணக்கத்திற்கு இடையூரு விளைவிக்க இனவாதத்தை பரப்பி வருவது கவலைக்குரியது -ரவூப் ஹக்கீம்

314 0

நாட்டில் சமய நல்லிணக்கத்திற்கு இடையூரு விளைவிக்கக் கூடியதாக ஒரு சாரார் குறுகிய கருத்து வேறுபாடுகளை தூண்டுகின்ற விதத்தில் இனவாதத்தை பரப்பி வருவது கவலைக்குரியது எனக் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டார்.

ஆன்மீகத்தில் அதிகம் கவனம் செலுத்துவதுடன்; சகிப்புத் தன்மையும் அவசியமானது என்றும் தெரிவித்தார். 

இரத்தினபுரி மாவட்டத்தில் பலாபத்தலவில் இன்று புதன்கிழமை யாத்திரைகள் ஓய்வெடுக்கும் விடுதியான இரண்டு மாடி கட்டடத்தை மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கும் நிகழ்வில்; கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அங்கு உரையாற்றுகையில் அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரிவித்ததாவது, 

எங்களுடைய அரசாங்கம் முன்னெப்போதையும் விட, கூடுதல் கரிசினை எடுத்து எல்லா சமயங்களுக்கும் உரிய வணக்கஸ்த்தலங்களை அபிவிருத்தி செய்து வருகின்றது. சிவனொளிபாத மலைக்கு செல்லும் பக்தர்களின் தேவையை கருத்திற் கொண்டு, இந்த யாத்திரைகள் ஓய்வெடுக்கும் விடுதியை நிர்மாணித்திருக்கின்றோம். 

எங்கள் நாட்டில் சமய நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கக் கூடிய விதத்திலே ஒரு சாரார் குறுகிய கருத்து வேறுபாடுகளை தூண்டுகின்ற விதத்தில் இனவாதத்தை பரப்பி வருவது கவலைக்குரியது. 

கடந்த ஆட்சி காலத்தில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டது. அதை தொடர்ந்து மக்கள் மத்தியில் வேறுபாடுகளை விதைக்கும் அமைப்புக்கள் தோன்றி, தேவையற்ற அட்டகாசங்களில் ஈடுபட்டன. இவ்வாறான தீவிரவாத குழுக்கள் சகல சமயங்களை பின்பற்றுவோர் மத்தியிலும் செயற்படாமல் தடுப்பதற்கு சமயத் தலைவர்கள் மிகவும் பொறுப்புணர்ச்சியுடனும், கண்காணிப்புடனும் இருந்து அவர்களை நேர்வழிப்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்துவது மிகவும் அவசியமாகும். 

எல்லா சமயங்களை அனுஸ்டிப்பவர்கள் மத்தியிலும் தீவிரவாத சிந்தனை போக்குள்ளவர்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள். சிறிய சம்பவங்களை காரணமாக வைத்து அசம்பாவிதங்கள் நடக்கின்றன. 

ஆன்மீகத்தில் நாங்கள் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். அத்துடன் சகிப்புத்; தன்மையும் இன்றியமையாதது. எங்கள் அமைச்சினூடாக பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை சகல மக்களும் பயன்படக் கூடிய விதத்தில் நாடளாவிய ரீதியில் முன்னெடுத்து வருகின்றோம் என்றார்.