இனவாத கருத்துக்களை தமிழ் மக்கள் மத்தியில் பரப்பி தமது அரசியல் இருப்பினை தக்கவைத்துக் கொள்ளும் நடவடிக்கைகளை மாத்திரமே தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னெடுக்கின்றது.
கடந்த நான்கு வருட காலமாக வடக்கின் அபிவிருத்தி தொடர்பில் இவர்கள் எவ்வித அக்கறையும் கொள்ளவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் சி. பி. ரத்னாயக்க குற்றஞ்சாட்டினார்.
பொதுஜன பெரமுன முன்னணியின் தலைமை காரியாலயத்தில் இன்று புதன்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அதிகார பகிர்வின் ஊடாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு அபிவிருத்திகளை முன்னெடுக்கலாம் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பினர் குறிப்பிடுவது ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழ் மக்களிடம் இனவாத வெறுப்புக்களை பரப்பி அதனூடாக தமது அரசியல் தேவைகளை பூர்த்தி செய்யும் ஏற்பாடுகளே தற்போது இடம் பெறுகின்றது.
அரசியல்வாதிகளே இனவாத கருத்துக்களை தூண்டி விட்டு அரசியல் இலாபம் தேடிக்கொள்கின்றார்கள். சிங்களம், தமிழ் , முஸ்லிம் ஆகிய மூன்று பிரிவிலும் இனவாதிகளே காணப்படுகின்றார்கள்.
தமிழ் மக்களுக்கு எதிராக இன அடக்கு முறையினை ஐக்கிய தேசிய கட்சியே ஆரம்பத்தில் கட்டவிழ்த்து விட்டது.
நாட்டை பிளவுப்படுத்தும் செயற்பாடுகள் ஒருபோதும் வெற்றிப் பெறாது. தமிழ் மக்களுக்கு முழுமையான அபிவிருத்திகள் வழங்கும் ஏற்பாடுகளுக்கு ஆதரவு வழங்க தயார் . அனைத்து இனங்களும் ஒரே முறையில் மதிக்கப்பட வேண்டும் என்றார்.