பாரிசு 13 பிராங்கோ தமிழ்ச் சங்கத்தின் 20ஆவது ஆண்டு விழா கடந்த 24-03-2019 ஞாயிற்றுக்கிழமை Salle Saint Just, Ivry-sur-Seine மண்டபத்தில் மதியம் 12 மணியளவில் சங்கத் தலைவி திருமதி தயாசீலி சின்னத்துரை மற்றும் திருமதி குமரவல்லி அருளழகன் ஆகியோரால் வரவேற்பு விளக்கேற்றி ஆரம்பித்துவைக்கப்பட்டது.
தொடர்ந்து பாடசாலை ஆசிரியர்களாலும் நிர்வாக உறுப்பினர்களாலும் மங்கள விளக்கேற்றப்பட்டது. மாவீரர்களுக்கும் பொதுமக்களுக்கும் மற்றும் அகால மரணம் அடைந்த மாணவன் விகாஷ் அவர்களுக்கும் அகவணக்கம் செலுத்தி தமிழ்ச்சோலை கீதம் மாணவர்கள் ஆசிரியர்களால் பாடப்பட்டு பிரெஞ்சு தேசியகீதம் இசைக்கப்பட்டது. வரவேற்பு நடனத்தைத் தொடர்ந்து வரவேற்புரையினை பாரிசு 13 நிர்வாகி திரு.முருகப்பிள்ளை அருளழகன் அவர்கள் வழங்கியிருந்தார். தொடர்ந்து பாடசாலை மாணவ மாணவிகளினால் நிகழ்சிகள் இனிதே ஆரம்பமானது. சிறுவர்கள் பாட்டு, தண்ணுமை, பேச்சு, கவிதைகள், நாடகங்கள் போன்ற நிகழ்வுகளை திறம்பட வழங்கியிருந்தனர். சிறப்பு விருந்தினர் உரையினை தமிழ்ச்சோலை தலைமைப் பணியக தேர்வுப் பொறுப்பாளர் திரு.அகிலன், தமிழர் ஒருங்கினைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர் திரு.மேத்தா ஆகியோர் வழங்கியிருந்தார்கள்.
இடைவேளையைத் தொடர்ந்து சங்கத்தின் தலைவி திருமதி தயாசீலி சின்னத்துரை தலைமை உரையாற்றினார். தொடர்ந்து கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றன. புது வெள்ளம், கைலாய வன்னியன் ஆகிய நாடகங்களை திரு. தில்லைநடேசன் நெறியாளுகை செய்திருந்தார். செயலாளர் திருமதி கௌரி மனோகரன் நன்றியுரையாற்றினார். பாடசாலையின் பழைய புதிய ஆசிரியர்கள் மற்றும் தரம் 12 நிறைவுசெய்த மாணவர்கள், தற்போது கல்வி கற்கும் சகல மாணவ மாணவிகளுக்கும் நினைவுப் பரிசில்கள் வழங்கப்பட்டு மதிப்பளிக்கப்பட்டனர். தமிழ்மொழி வாழ்த்துப் பாடல் இசைக்கப்பட்டதைத் தொடர்ந்து நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் படல் ஒலித்து, தமிழரின்தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவடைந்தன.