மதுரையில் இன்று தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் 47 கிலோ தங்க நகைகள் சிக்கியது.
தமிழகத்தில் வருகிற 18-ந் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலின் போது பணப்பட்டுவாடா நடைபெறுவதை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுரை பாராளுமன்ற தொகுதியில் 24 மணி நேரமும் வாகன சோதனை நடைபெறுகிறது. ஏற்கனவே நடைபெற்ற வாகன சோதனையில் தங்க நகைகள், கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை மதுரை அய்யர்பங்களா பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேன் மின்னல் வேகத்தில் வந்தது. அதனை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர்.
வேனுக்குள் பெட்டி, பெட்டியாக தங்க கட்டிகளும், நகைகளும் இருந்தன. அவற்றின் எடை 47 கிலோ. மதிப்பு ரூ.15 கோடி ஆகும்.
வேனில் இருந்தவர்களிடம் விசாரித்தபோது மதுரையில் இருந்து சேலத்தில் உள்ள நகை கடைகளுக்கு கொண்டு செல்வதாக தெரிவித்தனர். ஆனால் அவர்களிடம் ஆவணங்கள் ஏதும் இல்லை.
எனவே 47 கிலோ தங்க நகைகள், வேன் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட வேன் மதுரை கலெக்டர் அலுவலகத்துக்கு கொண்டு வந்து நிறுத்தப்பட்டுள்ளது.