ஊவா மாகாண முதலமைச்சருக்கு எதிராக, பதுளை மாவட்ட அரச வைத்தியர்கள், இன்று (3) பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொள்ளவுள்ளதுடன், பதுளை நகரில் கண்டன ஊர்வலமொன்றையும் நடத்தவுள்ளனர் என்று தெரியவருகிறது.
ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க, மாகாண சுகாதாரப் பணிப்பாளர் ஜனித்தா தென்னக்கோனை, தனது அலுவலகத்துக்கு அழைத்து அச்சுறுத்தியமை, கடுந்தொனியில் அவரை நிந்தித்தமைக்கு எதிராகவே, பதுளை மாவட்ட அரச வைத்தியர்கள், பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளனர்.
தெமோதரை அரசினர் வைத்தியசாலை வளாக வீதியை ஊடறுத்து, பாதையொன்றை அமைத்துத் தருமாறு, பிரதேச மக்கள், மாகாண முதலமைச்சரிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக, பாதையை அமைப்பதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்தப் பாதையை அமைப்பதற்கு, தெமோதரை வைத்தியசாலை நிர்வாகம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதுடன், ஊவா மாகாண சுகாதாரப் பணிப்பாளரின் கவனத்துக்கும் கொண்டு சென்றுள்ளது.
வைத்தியசாலை வளாகத்தின் ஊடாக பாதை அமைக்கப்பட்டால், அது வைத்தியசாலையின் செயற்பாடுகளுக்கும் நோயாளர்களுக்கும் பெரும் இடையூறுகளை ஏற்படுத்தும் என்று, காரணம் கூறப்பட்டுள்ளது.
எனினும், பாதை அமைக்கப்பட வேண்டும் என்பதில், கிராம மக்கள் விடாப்பிடியாக இருந்துள்ளதுடன், வைத்தியசாலை நிர்வாகத்துடனும் முறுகலில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், தெமோதரை வைத்தியசாலையின் வைத்திய அதிகாரியின் இல்லத்துக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இவ்விடயம் தொடர்பில் விசாரிப்பதற்காக, மாகாண முதலமைச்சர், ஊவா மாகாண சுகாதாரப் பணிப்பாளர் ஜனித்தா தென்னக்கோனை தமது அலுவலகத்துக்கு அழைத்துள்ளதுடன், பாதை அமைப்பதற்கு ஆதரவு வழங்கும்படி கோரியுள்ளார் என்றும் எனினும் அக்கோரிக்கையை சுகாதாரப் பணிப்பாளர் நிராகரித்துள்ளார் என்றும் தெரியவருகிறது.
இதனால் ஆத்திரமடைந்த முதலமைச்சர், சுகாதாரப் பணிப்பாளரை அச்சுறுத்தியதாகவும் அவரை நிந்தித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, முதலமைச்சர் விடுத்த அச்சுறுத்தலின் ஒளிப்பதிவுகளுடன், பதுளை பொலிஸ் நிலையத்துக்குச் சென்ற சுகாதாரப் பணிப்பாளர், முதலமைச்சருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளார்.
எனவே, ஊவா மாகாண முதலமைச்சர், மாகாண சுகாதார பணிப்பாளரிடம், பகிரங்கமாக மன்னிப்புக் கோர வேண்டுமென்று வலியுறுத்தியுள்ள ஊவா மாகாண அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், இல்லையெனில், முதலமைச்சருக்கு எதிராக பணிப்பகிஷ்கரிப்பையும் கண்டனப் பேரணியையும் நடத்தவுள்ளதாக, ஞாயிற்றுக்கிழமை (31) அறிவித்திருந்தது.
இதற்கமைவாகவே, பதுளை மாவட்ட வைத்திய அதிகாரிகள் சங்கம், இன்று (2) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதுடன், கண்டனப் பேரணியையும் நடத்தவுள்ளனர்.
மேலும் தெமோதரை வைத்தியசாலையின் வைத்தியர்கள் உள்ளிட்ட அனைவரும் மேற்கொண்டு வரும் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக, அவ்வைத்தியசாலை காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது.
மேற்படி வைத்தியசாலையின் ஊழியர்கள், நேற்று முன்தினம் வைத்தியசாலையை மூடிவிட்டு, அதன் சாவியை, பொலிஸாரிடம் கையளித்துள்ளனர் என்று தெரியவருகிறது.
ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க, ஏற்கெனவே, பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலய அதிபர் ஆர்.பவானியை நிந்தித்தமை தொடர்பான வழக்கு விசாரணை, நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்ற நிலையில், மற்றுமொரு குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.