“எரிக் சோல்ஹேம்மிடம் என்ன பேசவேண்டுமென்றும் . தமிழ்ச் செல்வனிடம் என்ன பேசவேண்டுமென்றும் இந்த மகேந்திரனிடமும் என்ன பேச வேண்டுமென்று தெரிந்திருக்கிறது.”

466 0

கடந்த சில தினங்களுக்கு முன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

1978-ம் ஆண்டு வெளிவந்த முள்ளும் மலரும் படம் மூலம் அறிமுகமாகிய 79 வயதுடைய இயக்குனர் மகேந்திரன், யதார்த்த சினிமாவின் இயக்குநர் என வர்ணிக்கப்படுகின்றார்.

தொடர்ந்து உதிரி பூக்கள், ஜானி, கை கொடுக்கும் கை உள்ளிட்ட தமிழ் சினிமாவின் முக்கியத்துவம் வாய்ந்த படங்களை இயக்கிய மகேந்திரன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கும், இயக்குநர் பாலு மகேந்திராவிற்கு மிகவும் பிடித்த இயக்குநர் என பெயர் பெற்றார்.

தமிழ் திரைப்படத் துறைக்கு பெருமை சேர்த்த இயக்குநர்களில் குறிப்பிடத்தக்க ஒருவரான மகேந்திரன், கடந்த சில ஆண்டுகளாக சிறுநீரகப் பிரச்னையால் பாதிக்கப்பட்டு இருந்தார். அதற்காக அவ்வப்போது டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொண்ட அவர் இன்று அதிகாலை காலமானார்.

தமிழக திரைப்பட இயக்குனர் மகேந்திரன், தேசியத்தலைவர் பிரபாகரனை சந்தித்த அனுபவம் தொடர்பாக கடந்த 2006 ஆம் ஆண்டு தமிழக சஞ்சிகையில் வெளியான கருத்துக்கள் இவை,

துப்பாக்கிகளுக்கும், கண்ணி வெடிகளுக்கும் இடையே ஒரு அதிரடி சந்திப்பு நிகழ்ந்திருக்கிறது. இயக்குநர் மகேந்திரன் தமிழீழத்தில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனைச் சந்தித்துத் திரும்பியிருக்கிறார்.

“திடீரென்றுதான் அழைப்பு. ரொம்ப நாளாக நின்றுபோயிருந்த சாசனத்தின் இறுதிக்கட்ட வேலைகளில் இருந்தேன். தமிழீழத்தில் சினிமா பற்றி ஆர்வமாக இருக்கிறார்கள். அவர்களுக்கு சினிமா பற்றிச் சொல்லி, ஒரு படமும் தயாரித்துத் தரவேண்டும். வரமுடியுமா? என்று கேட்டார்கள். மறுவார்த்தையாக மறுப்புச்சொல்லாமல் சம்மதித்தேன்.

அருமையான மூன்று மாதங்கள். 2006 ஆம் ஆண்டில் அங்கே தங்கியிருந்து ‘1996 ஆம் ஆண்டில் ஈழத்தில் நடந்த இடப்பெயர்வு’ குறித்தும் அவர்களின் வாழ்க்கை சார்ந்த சினிமாவையும் எடுத்துக் கொடுத்தேன். யாருமே முறைப்படி அனுபவம் பெற்ற நடிகர்கள் கிடையாது. 2006 இல் அந்த திரைப்படத்தின் இறுதிக்கட்ட வேலைகளில் இருந்த போது தான், திடீரென்று எடிட்டிங் அறையின் வெளியே கார் வந்து நின்றது.

சினிமா, கலைப் பிரிவுக்குத் தலைமை வகிக்கும் சேரா என்னை அணுகினார். நீங்கள் அவசியம் அவரைச் சந்திக்க வேண்டும். அவரும் உங்களோடு கதைக்க விரும்புகிறார். இப்போதே நீங்கள் புறப்பட வேண்டும் என்றார்கள்.

அதற்கான ஏற்பாடுகள், வரையறை, பாதுகாப்பு, சிறிய பதட்டம், பரபரப்பு, ஆர்வம். நாம் சந்திக்கப்போகிறவர் யார் என்று புரிந்துவிட்டது. வேகம் பற்றிக்கொண்டது. சூழ்நிலை கெடுபிடி ஆகிவிட்டது. வழியெங்கும் தம்பியின் படை. பிரமாதமான கட்டுக்கோப்பு. உங்களில் யாராலும் யூகிக்க முடியாத இடத்தை நோக்கிய பயணம்.

சேரா என்னிடம் மெல்லிய சிரிப்போடு, பேசிக் கொண்டே வந்தார். தலைவர் உங்களின் உழைப்பைப் பற்றி விசாரித்தார். சந்தோஷப்பட்டார். பார்க்க வேண்டும் என்று விரும்பினார்.

இந்த விருப்பம் சாதாரணமானதல்ல என்று பேசிக்கொண்டே வந்தார். எனக்கு ஒன்றுமே நிலை கொள்ளாமல் தவித்தேன். உலகத்தையே தன் பக்கம் பார்க்க வைக்கிற மாபெரும் தலைவன். அவரையே சந்தித்துப் பேசப் போகிற பேரனுபவம். அதை எப்படி நாம் உள்வாங்கப்போகிறோம் என்றெல்லாம் சிந்தனைகள்.

திடீரென்று அடுக்கடுக்கான விசாரணைகள். பாதுகாப்பு குளறுபடி இல்லாத கம்பீரமான விசாரணை. இருப்பிடம் நெருங்கப்போகிறோம் என்று தெரிந்துவிட்டது. சேராவிடம், நான் அவரை எப்படிக் கூப்பிடுவது. சார் என்றா, அல்லது வேறு முறையிலா? என்று, போட்டோக்களில் பார்த்திருந்த அவரின் கம்பீரத்தை நினைவுபடுத்திக் கேட்டேன்.

நீங்கள் அவரைத் தம்பி என்று அழைத்தால் பிரியப்படுவார். நாங்கள் எல்லோருமே அவரை எங்களுக்குள் அழைக்கும் விதம் அதுதான். ஒன்றும் பயப்பட வேண்டாம் என்றார். நான் பயப்படவில்லை. பெருமிதப்பட்டேன்.

அந்த இடமும் வந்தது. அரசியல் பிரிவுத்தலைவர் தமிழ்ச்செல்வன் வெள்ளைச் சிரிப்போடு எங்கிருந்தோ பிரசன்னமானார். என்னை வரவேற்று, அவர் இருக்கிற அறைக்கு அழைத்துப்போனார்.

நான் எப்படி அந்தக் கதவைத் திறப்பது என்று கணநேரம் திகைத்தபோது, மெல்லத் திறந்தது கதவு. வர்ணிக்க முடியாத கம்பீரத்தில் என்னை வணங்கினார் பிரபாகரன். என்னால் அவரை ஐயா என்றுதான் அழைக்க முடிந்தது.

என்னை இருக்கையில் அமர்த்திய பிறகே உட்கார்ந்தார். என் மனக்கதவுகளையெல்லாம் திறந்து உள்ளே போய்க் கொண்டேயிருந்தார் தலைவர்.உருகிக்கரைந்து உள்ளே போய்க்கொண்டேயிருந்தேன். அன்போடு பேசத்தொடங்கினார் தம்பி.

நாங்கள் உறக்கம் இல்லாமல், சதா விழித்துக்கொண்டேயிருக்கிறோம் என்றால், நீங்களும் ஏன் அப்படி இருக்கவேண்டும்?. உழைக்கிற நேரத்திற்குத் தகுதியாக நீங்கள் ஓய்வெடுக்கலாம் என்ற கரிசனத்தோடு ஆரம்பமானது பேச்சு. இரண்டு பேருமே ஐயா என்று விளித்துக் கொண்டோம்.

ராணுவம் எங்கள் நாட்டில் இளம்பெண்களை துஸ்பிரயோகம் செய்தமை. அப்படிக் கேவலப்படுத்தியதைவிட, தமிழ் சினிமா பெண்களை இழிவுபடுத்துகிறது என்று வருத்தத்தோடு பேசினார். கன்னத்தில் முத்தமிட்டால் எங்களைச் சரியாக முன்னெடுத்து வைக்கவில்லை என்று சுட்டிக்காட்டினார். பாரதிராஜா ஆய்த எழுத்து படத்தில் நடித்திருக்க வேண்டியது அவசியம்தானா? என்று கேள்வி எழுப்பினார்.

தமிழ் சினிமாவின் மீது அக்கறைப்பட்ட பேச்சை அப்படியே ஹொலிவுட் பக்கம் திருப்பினார் தம்பி. எனக்கு ஆச்சர்யம்… யார் இவர்! இவரின் பார்வைகள் என்ன? இப்படி ஒரு சின்ன தேசத்திலிருந்து உலகமே திரும்பிப் பார்க்க புறப்பட்டு வந்தது எப்படி? என்றெல்லாம் மனம் அலை பாய்ந்தது. ஹொலிவுட் படங்களும் திசை திரும்பியதைக் குறிப்பிட்டார். உங்களுக்கு ஹாரிசன் போர்டை பிடிக்குமா? என்று எனக்குப் பிடித்த அவரையே குறிப்பிட்டார்.

படக்காட்சிகளைத் தனித்தனியாகப் பிரித்துப்பேசினார். எனக்கு 200 ஹொலிவுட் சி.டிகளைப் பரிசாகத் தந்தார். அரைமணி நேரத்திற்கு இருக்கும் என்று நினைத்திருந்த பேச்சு மூன்றரை மணி நேரத்திற்கு விரிந்தது. என்னோடு உணவருந்தினார். என்னை முழுமையாக விசாரித்தார் முள்ளும் மலரும் கிளைமேக்ஸ் தன்னைப் பாதித்ததைக் குறிப்பிட்டார். உதிரிப்பூக்கள் அனுபவத்தைப் பகிர்ந்தார்.

நாங்கள் விடைபெறுகிற அந்தத் தருணம் வந்தேவிட்டது. வாசல் வரைக்கும் வந்து வழியனுப்பினார். கடைசியாகப் பேசிக்கொள்கிற நிமிடங்கள் உன்னதமாக அமைய, கூடியிருந்த பாதுகாப்புகளை விலகியிருக்கச் சொன்னார். நீங்கள் அடுத்த முறையும் வருவீர்கள். ஆனாலும் யுத்தம் அப்போதும் நடக்கும்.

இருந்தாலும் உங்களைச் சந்திப்பேன். என்றார். அவரது பேரன்பின் அடையாளமாகச் சிறிய தங்கப்பதக்கத்தைக் கொடுத்தார். அவரோடு புகைப்படம் எடுத்துக்கொள்கிற விருப்பம் உடனே நிறைவேற்றப்பட்டது. திரும்பி வண்டியில் உட்கார்ந்தபோது சீருடை, துப்பாக்கிகளோடு தலைவரின் அனுபவ சாந்தமும் மனசுக்குள் வந்தது.

கொழும்பு விமான நிலையத்தை வந்தடைந்தேன். என்னுடைய கைப்பையை வாங்கி, ஒரு சிங்கள அதிகாரி சோதனையிட்டார். அந்தப் பதக்கத்தைப் பார்த்த மறு விநாடி என்னை நிமிர்ந்து பார்த்து, புன்னகைத்து, உடனே கைப்பையை மூடி என்னை விமானத்தின் வாசல் வரைக்கும் வழி நடத்தினார்.

விமானத்தில் வந்து உட்கார்ந்து யோசித்தபோது,சந்தித்த மூன்றரை மணி நேரமும் ஒரு வார்த்தை கூட பிரபாகரன் அரசியல் பேசவில்லை என்பது ஞாபகத்திற்கு வந்தது.

அவருக்கு எரிக் சோல்ஹேம்மிடம் என்ன பேசவேண்டுமென்று தெரிந்திருக்கிறது. தமிழ்ச் செல்வனிடம் என்ன பேசவேண்டுமென்று தெரிந்திருக்கிறது. இந்த மகேந்திரனிடமும் என்ன பேசவேண்டுமென்று தெரிந்திருக்கிறது.” என தெரிவித்திருந்தார்.