அமெரிக்காவில் கால் செண்டர் மோசடி – இந்தியருக்கு 8 ஆண்டுகள் சிறை!

340 0

அமெரிக்காவில் கால் செண்டர் மூலம் பல லட்சம் டாலர்கள் அளவில் வரி வசூல் மோசடி செய்து இந்தியருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் 2 லட்சம் டாலர்கள் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்காவில் தனிநபர் வரி வசூல் செய்யும் அமைப்பு இண்டெர்னல் ரெவின்யூ சர்வீஸ் (ஐஆர்எஸ்) என்ற தனித்துறை செயல்பட்டு வருகிறது.

இந்த அமைப்பின் பணியாளர்கள் என கூறிக்கொண்டு அமெரிக்க வரி செலுத்துவோரிடம் உங்களது வரிகளை சரிவர செலுத்தவில்லை, ஆதலால் நாங்கள் சொல்கிறபடி ‘வரி’யை செலுத்துங்கள் என்று இந்தியாவின் மேகாலயா மாநிலத்தில் உள்ள ஷில்லாங் நகரில் இருந்தபடி சிலர்  ‘ஆணை’ பிறப்பித்தனர். அவ்வாறு செலுத்தவில்லை என்றால் சிறை செல்ல நேரிடும் என்று கூறி கால் செண்டர் ஆட்கள் மிரட்டியுள்ளனர். 

இதை உண்மை என்று நம்பி கடந்த 2014-16 ஆண்டுகளுக்கு இடையில் அமெரிக்காவில் உள்ள சிலர் பணமும் செலுத்தியுள்ளனர். 

இப்படி வசூலிக்கப்பட்ட பணத்தில் பாதி ‘ஹவாலா’ முகவர்கள் மூலம் ஷில்லாங்கிற்கு கொண்டு வரப்பட்டு கால் செண்டர் நடத்தும் நபர்களிடம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் ‘வரிப்பணத்தின்’ பெரும்பகுதி அகமதாபாத்தில் செயல்படும் முக்கிய நபர்களின் வசம் சென்று விடும். 

இது பற்றி தகவல் அறிந்த மேகாலயா மாநில காவல் துறையினர் இந்த போலி கால் செண்டரில் கடந்த 2017-ம் ஆண்டில் சோதனை நடத்தி 6 பேரை செய்துள்ளனர். அங்கிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட கணினிகளையும், ஏராளமான ஆவணங்களையும் கைப்பற்றினர். 

இது குறித்து முழுமையான அளவில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் அமெரிக்க போலீசாரும் இந்த மோசடி தொடர்பாக விசாரணை நடத்தி அங்கு சிலரை கைது செய்தனர்.

இந்த மோசடியில் தொடர்புடைய அலேஜான்டுரோ ஜுவரெஸ், ஹேமல்குமார் ஷா, ஷார்வில் பட்டேல், பிரென்டா டோசியர், நிதிஷ்குமார் பட்டேல் ஆகியோருக்கு எதிராக அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இவ்வழக்கில் தொடர்புடைய லேஜான்டுரோ ஜுவரெஸ் என்பவருக்கு சமீபத்தில் 15 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 

இந்நிலையில், இதே வழக்கில் அமெரிக்கா மற்றும் இந்தியாவில் இயங்கிவந்த மோசடி கும்பலுக்கு இடைத்தரகராக செயல்பட்ட நிதிஷ்குமார் பட்டேலுக்கு 8 ஆண்டு 9 மாதங்கள் சிறை தண்டனையும், 2 லட்சம் டாலர்கள்அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.