பிரபல இயக்குநர் மகேந்திரன் காலமானார்

290 0

பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் தனது 79ஆவது வயதில் காலமானார்.

கடந்த சில நாட்களாக சிறுநீரக கோளாறு காரணமாக சென்னை அப்போலோ வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மகேந்திரன் சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார்.

தனது தந்தையின் மறைவு குறித்த தகவலை அவரது மகன் ஜோன் மகேந்திரன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இயக்குநரின் மறைவிற்கு சினிமா பிரபலங்கள், இரசிகர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மென்மையான உணர்வுகள் இழையோடும் ஆழமான கதைக்காகவும், அழகுணர்ச்சி மிகு காட்சியமைப்புகளுக்காகவும் இவரது திரைப்படங்கள் புகழ் பெற்று விளங்குகின்றன.

சிற்றன்னை என்ற சிறுகதையினை அடிப்படையாகக் கொண்டு, 1979ஆம் ஆண்டு வெளிவந்த ‘உதிரிப்பூக்கள்’ என்ற திரைப்படத்தை இயக்கினார். இது தமிழ் திரையுலக வரலாற்றின் மிகச் சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக கருதப்படுகின்றது.

எம்.ஜி.ஆரை கதாநாயகனாக வைத்து பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக்க திரைக்கதை, வசனம் போன்றவற்றை எழுதிவைத்தார். ஆனால் பல்வேறு காரணங்களால் இதனை திரைப்படமாக்க முடியாமல் போனது. இயக்குனர் மகேந்திரன், ரஜினியை வைத்து ‘முள்ளும் மலரும்’, ‘ஜானி’, ‘காளி’, ‘கை கொடுக்கும் கை’ உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

அதன் பின்னர் நீண்ட காலமாக சினிமாவில் இருந்து விலகி இருந்த அவர், விஜய் நடிப்பில் வெளியான ‘தெறி’, ரஜினியின் ‘பேட்ட’ விஜய்சேதுபதியின் ‘சீதக்காதி’, அதர்வாவின் ‘பூமராங்’ உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் மீண்டும் திரையுலகிற்குள் பிரவேசித்து சாதிக்க ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.