தமிழர்- தேசிய இனமாக உலகப் பரிமாணம் பெற்றாக வேண்டும்: தி. திருச்சோதி,அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை

366 0

அமெரிக்காவில் நடைபெறும் “தமிழர்கள் இழந்த தமது இறையாண்மையை மீட்டெடுத்து தன்னாட்சி உரிமையுடன் வாழவேண்டும் ” எனும் கருத்தரங்கில் அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவையின் வெளிவிவகார இணைப்பாளர் திரு திருச்சோதி அவர்கள் கலந்துகொண்டு ஆற்றிய உரை .

தமிழர் ஒரு தேசிய இனம், தேசிய இனமாக இருந்து கொண்டு நாம் இன்று போராட்ட களத்தை சந்திக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். தமிழர் என்பது வெறும் இனத்தை சுட்டும் ஒரு சொல்லல்ல. மாறாக அது ஒரு பிரகடனம்.

இன்றைய உலகமயப்படுத்தலில் இறைமையுடன் வாழ்ந்த தமிழ் மக்களை,தேசிய இனங்களாக இருந்த எங்களை ஒரு குறுகிய சிறுபான்மையினராக மாற்றி வல்லரசுகள் தமது ஆதிக்கத்தை செலுத்திக்கொண்டு இருக்கிறார்கள். இந்த உலகமயமாக்குதல், அல்லது வல்லரசுகள் தமது ஆளுமைகளை ஏனைய நாடுகள் அல்லது உலகத்தில் வாழும் தேசிய இனங்களை பல வேற்று இனங்களுடன் ஒன்று சேர்ப்பது போன்ற செயல் திட்ட வரைவுகள் இன்று ஆரம்பித்தது அல்ல. காலனித்துவ காலத்தில் இருந்து இந்த சிந்தனைகளுக்கு செயல்வடிவங்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது.
img-20161008-wa0017

அந்த திட்டத்தில் அழிந்த மக்கள் – இனங்கள் எத்தனையோ- இதட்கு எதிராக போராடிய இன மக்கள் பல காலகட்டங்களில் அவர்களின் போராட்டங்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டும் இருக்கிறது. நைஜீரியாவில் இருந்து பிரிந்து வாழ இக்போ மக்கள் தீர்மானித்து பியாப்பிர என்ற நாட்டை உருவாக்கி அதனை தம்மை தாமே ஆழ மூட்டப்பட்ட போது அன்றைய கால கட்டத்தில் பிரான்சின் ஜனாதிபதி- 2ஆவது உலகப்போர் காலப்பகுதியில் இங்கிலாந்தில் இருந்து படையணியை உருவாக்கி ஜெர்மனிய ஹிட்லர் ஆட்சியில் இருந்து பிரான்ஸை மீட்டேடுத்த சார்லஸ் டே கால் அவர்கள் பிப்பிரா நாட்டுக்கு, அவர்கள் தம்மை பாதுகாத்து கொள்ள ஆயுதங்களை கொடுத்து தனது ஆதரவை தெரிவித்து இருந்தார். ஆனால் பிரித்தானிய ஆதிக்கத்தில் அல்லது ஆதரவு தளத்தில் இருந்த நைஜிரியா, இக்போ இனமக்கள் பியப்பிர என்ற நாட்டை உருவாக்கி வாழ அதை ஒரு பாரிய இனப்படுகொலைக்கூடாக அவர்கள் இனம் அழிக்கப்பட்டது அவர்களது போராட்டம் அழிக்கப்பட்டு இன்று மறக்கப்பட்ட இனமாக, அவர்கள் அடையாளங்கள் அழிக்கப்பட்டு வாழ்கிறார்கள்.

இன்று இந்த உலகமயமாக்களில் முகம் கொடுத்து தமது போராட்டத்தை உயிர்ப்புடன் வைத்திருப்பவர்களாக குர்திஸ்தான் இன மக்கள், பாலஸ்தீன மக்கள் மற்றும் தமிழ் மக்கள் ஆகியோர் இன்றும் போராட்ட களத்தில் நிட்கின்றோம்.

அதில் தமிழ் மக்களின் போராட்டத்தை மனிதவுரிமை, பொருளாதாரம் என்ற வரையறைக்குள் கட்டி வைத்து ஜெனீவா மனிதவுரிமை சபையில் எமது வலுவையெல்லாம் முடக்கி எம்மை மாற்று சிந்தனைக்குள் போகாமல் கட்டி போட்டு வைத்திருக்கிறது இந்த சர்வதேசம், மற்றும் அவர்களின் ஆலோசனையில் செயல்படும் நாடுகளுக்கு ஆதரவை அளித்து பாதுகாக்கிறார்கள். அதில் சிறி லங்கா முக்கிய பங்கை வகிக்கிறது.

img-20161008-wa0018

முள்ளி வாய்க்கால் இனஅழிப்பு போர் முடிவுற்ற சூழலில் தான் உலகத்தில் வாழும் தமிழ் மக்கள் தமது பலவீனத்தை புரிந்து கொள்கிறார்கள் – தமிழ் தாயகத்தில் 8 கோடி உறவுகள் இருந்த போதும் உலகம் எங்கும் கால சூழலில் தமது நாடுகளில் இருந்து வெளியேறி வாழ்ந்த தமிழ் மக்களும் சர்வதேசம் நடத்திய மாபெரும் இனப்படுகொலையை தடுக்க முடியாத சூழலில் நாம் இருந்தோம்.

12 கோடி தமிழர்கள் எங்களால் எமது இனம் அழிவதை கண்டு நாம் அழத்தான் முடிந்தது.

நாம் மிக முக்கியமாக கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய விடயம் – இதுவரை காலமும் வெளிவந்த மனிதவுரிமை சபை அறிக்கைகளில் ஸ்ரீ லங்காவில் பாதிக்கப்பட்டவர்கள் யார் என்ற கேள்விக்கு இந்த பிரேரணைகளில் பாதிக்கப்பட்டவர்கள் இந்துக்கள் – கிறிஸ்தவர்கள்- இஸ்லாமியர்கள் என்ற சொட்பதங்கள் தான் பாவிக்கப்பட்டது.

இதில் இருந்து நாம் புரிந்து கொள்ளவேண்டியது, சர்வதேசம் எம்மை தமிழ் மொழி பேசும் மக்களாகவோ, தமிழ் இனமாகவோ, சிறி லங்காவின் இனவெறி அரசியலால் பாதிக்கப்பட்ட ஒரு பூர்வீக குடி மக்களாகவோ கவனத்தில் கொள்ளாமல் தமிழர்களை சிறி லங்காவில் வாழும் சாதாரண மக்களாக பார்க்கின்றது என்றே கூறலாம்.

தமது நலனுக்காக, தமது புவியில் வல்லமையை உறுதி படுத்துவதட்க்காக, ஈழத்து தமிழரை, ஈழத் தமிழருக்காக செயல்படும் தமிழர் அமைப்புகளை மனிதவுரிமை சபை ஊடாக எமது மக்களுக்கு விடுதலை கிடைக்கும் என்ற அதி தீவிர நம்பிக்கையை ஊட்டி எமது செயல்பாடுகளை முடக்கி வைத்திருக்கிறார்கள். தமிழ் மக்கள் ஜெனீவாவை மட்டும் மையமாக கொண்டு சிந்திக்கிறோம், ஜெனீவாவை நாம் அடியொற்றி நிட்கும் போது தமிழ் மக்களின் இனப்பிரச்சினையை வெறுமனே மனிதவுரிமை பிரச்சனையாக அவர்கள் சுருக்குகிறார்கள்.நிலைமாறு கால நீதி என்ற விடயத்தினால் மேலும் மக்களின் பிரச்சனையை சுருக்குகின்றார்கள். எமது விடயம் புது டெல்லியிலும் வாஷின்டோனிலும் தீர்மானிக்கப்படும் விடயமாகிறது.நாங்கள் ஏழு ஆண்டுகளாக எமது பிரச்சனைகளை மனிதவுரிமை பிரச்சனையாக வைத்திருக்கிறோம் நாங்கள் விரும்பும் அடர்த்தியில் பெற்று தர மாட்டார்கள்.

img-20161008-wa0019

பலஸ்தீனர் இதே மனிதவுரிமை சபையில் செயல்படுகிறார்கள், தொடர்ச்சியாக தமது மக்களுக்கு நடைபெறும் மனிதவுரிமை மீறல்களை வலியுறுத்துகிறார்கள் ஆனால் பலஸ்தீனர் தங்களை ஒரு தேசிய இனமாக நினைத்து அதன் வழியில் ஐக்கியநாடுகள் பொதுச்சபையில் செயல்பட்டு ஆரம்பத்தில் ஐக்கியநாடு பொதுச்சபையில் பார்வையாளர் அங்கீகாரத்தை பெற்று இன்று அதே பொதுச்சபையில் நாடுகளின் வாக்குகள் ஊடாக பலஸ்தீன நாட்டின் அங்கீகாரத்தை பெற்று இருக்கிறார்கள், இதை தடுக்க வலுமை உடைய நாடுகள் எடுத்த முயட்சி கைகூட வில்லை, ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் வேட்டோ வாக்குரிமையை வைத்து பாலஸ்தீனத்தின் அங்கீகாரத்தை தடுக்க பல முயட்சிகளை எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

பலஸ்தீன மக்கள் அமைப்பாகிய plo க்கு ஐக்கியநாடுகள் பொது சபையில் பார்வை யாளர்கள் உரிமை கொடுக்கப்பட்டது, அதன் ஊடாக அவர்கள் நாடுகளுடன் ஆனா உறவை வலுப்படுத்தி இன்று பலஸ்த்தீனம் என்ற நாட்டுக்கு அங்கீகாரம் பெற்றுக்கொடுத்து இருக்கிறார்கள்.

இன்று எமது தமிழின அரசில் சமூகவியல் பொருளாதார . அரசியல் செயல்பாட்டுக்கு வேறுவடிவம் ஒன்றை கொடுக்கவேண்டிய சூழலில் நாம் இருக்கிறோம்.

நாம் ஒரு தேசிய இனம் என்பதை முன்னிறுத்தி எமது செயல்வடிவங்களை மாற்ற வேண்டும். தமிழ்த் தேசிய இனம் தனது விடுதலைப்பாதையில் விரைந்து பயணிக்க தடையாக எவை இருக்கின்றன என்பதை நாம் ஆராயவேண்டும்.

திம்பு உடன்பாட்டின் போது ஈழத்து தமிழரை ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்க வேண்டும் என்ற சரத்து முதன்மை பெற்று இருந்தது.

தமிழர் பிரச்சனை ஒரு தேசிய இனப் பிரச்சனையாக கருதப்படவேண்டும். அந்த தேசிய இனத்துக்குரிய சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் ஒரு உச்ச பட்ச தன்னாட்சி அதிகாரங்களை கேட்பவர்களாக இருக்க வேண்டும்.

இன்று உலகம் இருக்கும் சூழலில் உலகமயமாக்கலின் உச்சக்கட்டத்தில் சிறி லங்காவில் மாற்றங்கள் நடந்து கொண்டு இருக்கும் சூழலில் நாம் தேசிய இனம் என்ற நிலையில் உச்சபட்ச தன்னாட்சி கிடைப்பதட்க்கான வாய்ப்புகள் அருகிச்செல்கின்ற சூழலில் நாம் என்ன செய்யப்போகிறோம். எமது பேசும் சக்தி தாழ்ந்து கொண்டே போகின்றது. எப்படி ஒற்றையாட்சிக்கு வெளியே போகக்கூடிய தன்னாட்சியை பெறப்போகிறோம். அதட்காக பாராளுமன்றத்திட்கு வெளியே போராடும் வலு எமக்குண்டா? அந்த வலுவை நாம் எப்படி பெறப்போகிறோம்?

நாம் ஆழ்ந்து சந்திப்போமாக இருந்தால் தமிழர்களாக நாம் எமது வலுவை கட்டியெழுப்பவேண்டிய சூழலில் நிட்கிறோம். நாம் அரசற்ற மக்கள், நாம் இந்த உலகத்தை வேறு வடிவத்தில் அணுக வேண்டும்.

நாம் எமது மக்களின் கூட்டு காயங்களிலிருந்தும், கூட்டு மனவடுக்களிலிருந்தும் எமது பிரச்னையை இதுவரை காலமும் அணுகியே செயல்பட்டு வந்தோம். இவ்வாறு அணுகி பல ஆதரவு தளங்களை உருவாக்கி இருக்கிறோம், மனிதவுரிமை சபையில் திட்டமிட்ட படுகொலை என்று எழுத்தில் பதிவாகி பல்லாயிரக்கணக்கான பக்கங்கள் உடைய அறிக்கைகள் சாட்சியங்கள் இன்று இருக்கிறது. இதுவரை காலமும் சிறி லங்காவில் கொம்மிஷன்களில் பதியப்பட்டு தீர்வுகள் இல்லது இருந்தது- இன்று சர்வதேச சபைக்கு இவை கொண்டு வரப்பட்டுள்ளது.

அடுத்து நாம் ஒரு தேசிய இனம் – தமிழர்கள் ஒரு தேசிய இனம்- அந்த தேசிய இனமாகிய நாம் அதை உறுதிப்படுத்தும் அணுகு முறையில் நகரவேண்டிய காலம் இன்று. அதட்கு நாம் எங்களை ஒரு தேசிய இனமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். தேசிய இனம் என்ற அடிப்படையில் தமிழ் மக்களை ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்கும் செயல்திட்டங்கள் வடிவமைக்க பட வேண்டும்.

அதட்கு மக்கள் மையப்படுத்திய செயல்பாடுகள், ஊடாகவும், இராச்சிய செயல்பாடுகள் ஊடாகவும் தான் பெறலாம் என்று நாம் தீர்மானித்துக்கொள்ளவேண்டும்.

இவ்வாறு தேசிய இன வலியுறுத்தல் செயல்பாட்டில் தமிழர்களாக, தமிழகம், தாயகம், மலையகம் மற்றும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் சமூகமும் ஒன்றிணைந்த சிறகுகள் என்பதை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும். தமிழன் என்று தன்னை அறிவிக்கிறவன் சுய சாதி மறுப்பாளானாக, மத மறுப்பாளானாக விளங்குகிறான். அனைத்து விதமான ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான உளவியலை தமிழ்த்தேசிய உணர்வே சாத்தியப்படுத்துகிறது.தமிழர்களில் யாரும் உயர்ந்தோரும் இல்லை. தாழ்ந்தோரும் இல்லை.

தமிழ் சமூகத்தை ஒரு இராச்சிய செல்வாக்கு மிக்க சக்தியாக கட்டியெழுப்புவது என்ற முடிவை மேட்கொள்ளவேண்டும். அதன் ஊடாக சக்திவாய்ந்த தமிழ் சக்தியை உருவாக்க முடியும்.

ஏறத்தாள 3000 ஆண்டு காலத்திற்கு முற்பட்ட செழுமையான இலக்கிய, இலக்கண வளர்ச்சியுடைய மொழி தமிழ் ஒன்றே, இந்தியா -தமிழீழத்துக்கு வெளியே கடல் கடந்த பல நாடுகளிலும் தமிழர்கள் பரவி தமிழும் பரவி இருக்கிறது.

உலகின் மூத்த மொழிகளில் லத்தீன் (75 B C ), அர்மேனியன் (450 B C ) கொரியன் (600 B C ) Herbrew (1000 B C )சீனம் (1200 B C ) கிரேக்கம் ( 1450 B C )எகிப்தியம் (2600 B C ) சமஸ்கிரதம் (3000 B C ) மூத்த பெரு மொழியாக தமிழ் (5000 ) வருடங்களையும் கடந்து செழித்தோங்கி வளர்ந்து நிற்கின்றது.

அது மட்டுமன்று, இவற்றினும் பழமையான நாகரீகம் வளர்த்த பண்டைய மொழிகள் யாவும் அழிந்து இருந்த இடம் தெரியாமல் போய்விட, அழிந்து போய் இருந்த herbrew மொழி இஸ்ரேலிய நாடு உருவாக்கம் பெற்றதனால் இன்று உயிர்பெற்று பேசும் மொழியாக இருக்கிறது.

பாபிலோனிய – மெசொபொடோமியா சுமேரிய நாகரீகங்கள் அழிந்து விட்ட நிலையில், சிந்து வெளி நாகரிகத்தில் உருவான தமிழர் நாகரீகம் ஒன்று தான் இன்று உயிர்ப்புடன் இருக்கும் நாகரீகம் ஆக இருக்கிறது.

தொல்காப்பியத்தில் தொடங்கிய மொழிக்காப்புணர்வு, சங்க இலக்கியங்களிலும் ஐம்பெருங்காப்பியங்களில் மொழிப் போற்றுதலாக வளர்ந்தது. சமய இலக்கியங்களில் தமிழ் மொழி முதன்மை படுத்திப் போற்றப் பெற்றது.

இன்று உலகம் மாறும் வேகத்தில் உலகத்தின் மூத்த மொழியாக கருதப்படும் தமிழ் மொழி – உலகத்தின் மூத்த குடிகளாக கருதப்படும் தமிழ் இனம் தமது மொழி அடையாளத்தைக் கலாச்சாரத்தை இழந்து கொண்டு போவதை கண் கூடாக காண்கிறோம்.

அதட்கு முக்கியமான காரணம் நாங்கள் எங்களை ஒரு தேசிய இனமாக இனம் காட்டி கொள்ளாததுதான். நாங்கள் வாழும் நாடுகளில் எமது மொழி கலை கலாச்சாரத்தை பாதுகாத்து கொண்டிருக்கும் நாங்கள், எமது வரலாறு, எமது தோற்றம் ஆகியவற்றை மறந்து எங்களை நாங்கள், தேசிய இனமாக, பழங்குடி மக்களின் வழித்தோன்றலாக சிந்திக்காமல் நாம் வாழும் நாடுகளில் வாழும் மக்களாக மாற்றிக்கொண்டு இருக்கின்றோம். அப்படி நாம் வாழ்ந்தாலும் கூட எம்மை நாம் ஒரு தேசிய இனமக்களாக சிந்தித்து செயல்படுவதில் எந்த தவறும் இல்லை. எமது இறைமையை பாதுகாத்துக்கொண்டு நாம் வாழும் நாட்டின் இறைமைக்கு வலுவூட்டுபவர்களாகவும் நாம் இருக்கலாம்.

உலகெங்கும் வாழும் தமிழ் மக்களில் கிட்டத்தட்ட 8 கோடிக்கு மேல் தமிழ் நாட்டிலும் – இந்தியாவின் பல பகுதியில் வாழ்ந்தாலும் கிட்டத்தட்ட 4 கோடி தமிழ் மக்கள் உலகெங்கும் பரந்து வாழ்கிறோம்.

காலனித்துவ காலத்தில் அடிமை ஒழிப்பின் பின் உலகெங்கும் பிஜி தீவு முதல் – New Caledonia – Vanuatu -Mauritius – Reunion தீவுகள் – தென் ஆப்பிரிக்கா – மேற்கு இந்திய தீவுகள் வரை கொத்தடிமைகளாக தமிழ் மக்கள் வேலைக்காக கொண்டு செல்லப்பட்டார்கள். இவர்களின் மக்கள் தொகை 2 கோடிக்கு மேல் இருக்கும். இன்று இவர்கள் தமிழ் மொழி பேசாதவர்களாக தமிழ் அடையாளங்களுடன் காத்து வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். மௌரிசியஸ் – ரியூனியன் ( Reunion Islands ) தென் ஆபிரிக்க போன்ற நாடுகளில் இன்று தமிழ் மொழி காக்கும் இடங்களாக கோவில்கள் தான் இருக்கின்றன அதில் மௌரிசியஸ் நாட்டில் 70 வீதமான கோவில்களில் தமிழ் மொழியிலேயே பூஜைகள் நடைபெறுகின்றன ஆனால் தமிழ் மொழி பேசும் மக்களாக அவர்கள் இல்லை.

அதன் பின் தொழில் காரணமாக சென்றவர்களும் காலனித்துவ ஆட்சி காலத்தில் பர்மா- மலேசியா – சிங்கப்பூர் – இந்தோனேசியா பிரித்தானிய – அமெரிக்கா – கனடா போன்ற நாடுகளுக்கு சென்றவர்களும் இன்று பர்மியராகவும் மலேசியர், சிங்கப்பூர், அமெரிக்கர், பிரித்தானியர் ஆகவும் பெரும் பகுதியினர் தமிழ் மொழியை மறந்தவர்களாக வாழ்கிறார்கள். மீதியாக இருக்கும் தமிழர்கள் தமிழ் மொழியை இன்னும் எத்தனை வருடங்கள் காத்துக்கொள்வார்கள் என்பது கேள்விக்குறி?

அத்துடன் இலங்கையில் இருந்து அங்கு வாழ முடியாமல் தமது பாதுகாப்பு கருதி நாட்டை விட்டு வெளியேறிய 1.5 மில்லியனுக்கு மேற்பட்ட தமிழர்கள்.

எல்லோரும் அவரவர் வாழும் நாடுகளில் ஐக்கியம் ஆகி விடும் சூழல் இன்று முன் நிற்கிறது.

நாம் இன்று உலகத்தில் கிட்டத்தட்ட 12 கோடி தமிழர்கள் இருக்கிறோம் என்பது ஒரு கணிப்பீடு. உலகத்தில் மிகவும் பழமை வாய்ந்த எமது இனம் – உலகத்தில் பழமை வாய்ந்த மூத்த கலாச்சாரங்கள் பல அழிந்துள்ள நிலையில் உயிர்ப்புடன் இருக்கும் ஒரே கலாச்சாரம் தமிழர் கலாச்சாரம் – உலகத்தில் மொழிகளுக்கு எல்லாம் அடிப்படை மொழியாக இருக்கும் தமிழ் மொழி இன்னும் எத்தனை நூறு ஆண்டுகள் இந்த உலகமயமாக்கத்தில் தாக்கு பிடித்து நிற்கும் என்பதை நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

நாங்கள் ஒரு இனமாகவோ – பூர்வீக குடிகளாகவோ அங்கீகாரம் அற்ற மக்களாகவோ உலகத்தில் எம்மை பாதுகாத்துக்கொள்ள எந்த வித வழிவகைகள் – இன்றி வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். எமக்கு இன்று அடையாளம் அங்கீகாரம் தேவை – இல்லையேல் நாம் அழிந்து விடுவோம்.

இன்று நாம் தமிழ் மக்கள் இழந்த தமது இறைமையை மீட்டெடுத்து ஒரு இனமாக எம்மை அடையாளப்படுத்த வேண்டிய அவசியம் இன்று உருவாகியிருக்கிறது. இன்றைய கால சூழலில் பல வழிகளில் பல பிரதேசங்களில் தமிழர் அடையாளங்கள் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சூழலில் 12 கோடி தமிழர்களும் தமிழ் இனமாக எழுந்து நிற்க வேண்டிய அவசியம் ஏட்பட்டுள்ளது.

உலகத்தில் உலக அங்கீகாரம் பெற்ற ஒரு இன மக்களுக்கு தான் அழிவில் இருந்து பாதுகாக்க அங்கீகாரங்கள் உண்டு. இன்று எம்மை ஒரு இனமாகவோ, பழமை வாய்ந்த பூர்வீக குடிகளாகவோ இன்றைய சர்வதேச நாயகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

ஆகவே இன்றைய கால சூழலில் உலகத்தில் வாழும் தமிழர்களை ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கூற வேண்டிய காலம் வந்திருக்கின்றது என்று நினைக்கின்றோம்.

யூத மக்கள், மொழி அழிந்து பல்லாயிரம் ஆண்டுகள் ஆன பின் தமது அழிவில் இருந்து தம்மை பாதுகாக்க zionism என்ற உலக அமைப்பு அமைக்கப்பட்டு தமது இன அடையாளத்தை பாதுகாக்க வழிவகைகளை செய்தார்கள். யூதர்கள் தம்மை ஒரு தேசிய இனமாக நினைத்து தாம் இழந்ததாக கூறும் அந்த நாட்டை அடைய, தமது மொழி, கலை, கலாச்சாரம், வாழ்க்கை முறை, சமயம் ஆகியவற்றை அடைய செய்த போராட்டமும், அவர்களுக்கு எதிராக ஐரோப்பாவில் நடைபெற்ற அழிவும், அவர்களுக்கு உரிய நாட்டை பெற்றுக்கொடுத்தது. இஸ்ரேல் என்ற நாடு உருவாவதட்க்கு புவியல் அரசியலும் ஒரு காரணமாக இருந்தாலும், அவர்களின் தொடர் முயட்சியும் இதட்கு காரணம்.

இன்று உலகத்தில் இருக்கும் அணைத்து தமிழர்களையும் தேசிய இனமாக சிந்திக்க வைக்கவேண்டிய தேவை எழுந்துள்ள சூழலில் உலகத்தில் பரந்து வாழும் தமிழர்கள் தங்களை ஒரு தேசிய இனமாக பல நாடுகளில் சிந்திக்க ஆரம்பித்துள்ள சூழலில், நாம் எல்லோரும் தேசிய இனமாக சிந்திக்க ஆரம்பிக்கின்ற போது உள்நாட்டிலும், அயல்நாட்டிலும் அனைத்துலக மட்டத்திலிருந்திலிருந்தும்இதை தடுக்க பல தடைகள் வரலாம், அவற்றை எதிர்கொள்ள நாம் தயாராக வேண்டும், நாம் துணிந்து செயல்பட கூடியவர்களாக சவால்களை எதிர்கொள்ள கூடியவர்களாக மாறவேண்டும்.

உலகத்தில் ஒரு பாரிய போராட்டத்தை முன்நகர்த்திய எங்காளல் இது முடியாது என்பது இல்லை. சிங்கள அரசுகள் இவற்றை எல்லாம் எதிர்கொள்வோம் என்று துணிந்து முடிவுகளை எடுத்துக்கொண்டு இருப்பதால் தான், இன்று அவர்கள் தாம் நினைத்ததை செய்து கொண்டு இருக்கிறார்கள்.

2002 ஆம் ஆண்டு மாவீரர் தின உரையில் தேசியத் தலைவர் மாண்புமிகு வேலுப்பிள்ளை பிரபாகரன்,

“ஐ.நா. சாசனத்திலும், பிரகடனங்களிலும் குறிப்பிடப்படும் சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டை மையப் பொருளாகக் கொண்டே எமது போராட்ட இலட்சியம் நெறிப்படுத்தப்பட்டிருக்கிறது. அன்றும் சரி, இன்றும் சரி, சுயநிர்ணய உரிமைக்கான எமது போராட்ட இலட்சியத்தில் நாம் உறுதி பூண்டு நிற்கின்றோம். தமிழர் தாயகம், தமிழர் தேசியம், தமிழரின் சுயநிர்ணய உரிமை ஆகியனவையே எமது அரசியல் இலட்சியத்தின் அடிப்படைகள். திம்புவிலிருந்து தாய்லாந்து வரை இந்த அடிப்படைகளையே நாம் வலியுறுத்தி வருகின்றோம். இம் மூலக் கோட்பாடுகளின் அடிப்படையிலேயே தமிழரின் தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்பது எமது நிலைப்பாடு.

தனித்துவமான ஒரு மொழி, பண்பாடு, வரலாறு, நன்கு வரையறுக்கப்பட்ட ஒரு தாயக நிலம், இன அடையாள உணர்வு போன்ற பண்புகளை உடையவர்கள் என்பதால், எமது மக்கள் ஒரு தேசிய இனமாக, ஒரு மக்கள் சமூகமாக அமைந்துள்ளனர். ஒரு தனித்துவமான மக்கள் சமூகம் என்ற ரீதியில் எமது மக்கள் சுயநிர்ணய உரிமைக்கு உரித்தானவர்கள். சுயநிர்ணய உரிமை என்பது உள்ளான, புறமான இரு அம்சங்களைக் கொண்டது. உள்ளான சுயநிர்ணயம் என்பது ஒரு மக்கள் சமூகத்தின் பிரதேச சுயாட்சி உரிமையை வலியுறுத்துகின்றது.

தமிழ் மக்கள், தமது சொந்த மண்ணில், வரலாற்று ரீதியாக வாழ்ந்து வந்த பாரம்பரிய மண்ணில், அந்நிய சக்திகளின் ஆதிக்கம், தலையீடு இன்றி, சுதந்திரமாக, கௌரவமாக வாழ விரும்புகின்றார்கள். தமது மொழியை வளர்த்து, தமது பண்பாட்டைப் பேணி, தமது பொருளாதாரத்தை மேம்படுத்தி, தமது இன அடையாளத்தைப் பாதுகாத்து வாழ விரும்புகின்றார்கள். தமது தாயக மண்ணில், தம்மைத் தாமே ஆளும் சுயாட்சி உரிமையோடு வாழ விரும்புகின்றார்கள். இதுவே எமது மக்களின் அரசியல் அபிலாசை.” என்று பேசினார்.

இன்று நாம் தமிழராக- தமிழ் தேசிய இனமாக சிந்தித்து எமது செயல்பாடுகளை முன்நகர்த்த வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயம்.

அதனால் நாம் ஒரு தமிழ் தேசிய இனமாக சிந்திப்போம் – ஒரு தேசிய இனத்துக்குரிய வடிவத்தை உருவாக்கி உலகத்தை வெல்வோம்.

தி. திருச்சோதி

வெளிவிவகார இணைப்பாளர், அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை