மரண தண்டனையை நிறைவேற்றுவதை கைவிடுங்கள்- மனித உரிமை கண்காணிப்பகம்

280 0

மரண தண்டனையை நிறைவேற்றும் திட்டத்தை இலங்கை அரசாங்கம் கைவிடவேண்டும் என சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 

இலங்கையில் மரணதண்டனையை  நிறைவேற்றுவதற்கு நான்கு தசாப்தங்களாக தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் மரணதண்டனையை நிறைவேற்றுவதை முன்னெடுப்பதற்கான தேவையெதுவும் இல்லை என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியாவிற்கான இயக்குநர் மீனாக்சி கங்குலி தெரிவித்துள்ளார்

பிலிப்பைன்சின்  கொலைகள் நிறைந்த போதைப்பொருளிற்கு எதிரான யுத்தத்தினால் உந்தப்பட்டே மரணதண்டணையை நிறைவேற்ற தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி சிறிசேன தெரிவிப்பது மிக மோசமான நியாயப்படுத்தலாக காணப்படுகின்றது என தெரிவித்துள்ள மீனாக்சி கங்குலி மரண தண்டனை நிறைவேற்றம் சர்வதேச சட்டங்களை மீறுவதாக அமையும் எனவும் தெரிவித்துள்ளார்

மரணதண்டனையை முற்றாக கைவிடும் நோக்கத்துடன் இலங்கை அரசாங்கம் மரணதண்டனையை நிறைவேற்றுவதை ஒத்திவைப்பது குறித்து வெளிப்படையாக தன்னை அர்ப்பணிக்கவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
போதைப்பொருள் சார்ந்த குற்றங்களிற்காக மரணதண்டனையை நிறைவேற்றுவது இலங்கையின் சர்வதேச மனித உரிமை கடப்பாடுகளை மீறும் நடவடிக்கையாக அமையும் எனவும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது