யுத்தம் முடிவடைந்து 10 ஆண்டுகள் கடந்தும் வடக்கு மாகாணத்திலுள்ள மக்களின் வாழ்க்கையில் பாரியதொரு மாற்றம் இன்னும் ஏற்படாமல் இருக்கின்றதென வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன், இலங்கைக்கான பிரான்ஸ் நாட்டு தூதுவர் எரிக் லெவருடுக்கு (Eric LAVERTU) குறிப்பிட்டுள்ளார்.
ஆகையால், அவர்களின் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய வழிமுறைகளை மேற்கொள்ள முயற்சி செய்து வருவதாகவும் ஆளுநர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார
பிரான்ஸ் நாட்டு தூதுவர் எரிக் லெவருடுக்கும் (Eric LAVERTU) வடக்கு ஆளுநர் சுரேன் ராகவனுக்கும் இடையில் நேற்று சந்திப்பொன்று இடம்பெற்றுது. இதன்போதே சுரேன் ராகவன் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் வடக்கிற்கான தனது முதலாவது விஜயத்தினை மேற்கொண்டுள்ள பிரான்ஸ் தூதுவரை உற்சாகமாக வரவேற்ற ஆளுநர், வடக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் குறித்து தெளிவுபடுத்தியுள்ளார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் நீர்ப்பிரச்சினை காணப்படுவதுடன் அதனை நிவர்த்தி செய்வதற்கு சாத்தியமான வழிமுறைகள் தொடர்பில் ஆராய்ந்து வருகின்றோம். அதற்கு பிரான்ஸ் நாட்டினால் வழங்கக்கூடிய உதவிகள் மற்றும் திட்டங்கள் குறித்து ஆராயுமாறு பிரான்ஸ் தூதுவரிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை ஆளுநருடனான இந்த சந்திப்பு மிகுந்த ஆக்கபூர்வமாக அமைந்திருந்தமையை சுட்டிக்காட்டிய பிரான்ஸ் தூதுவர், பிரான்ஸ் நாட்டினால் வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளக்கூடிய உதவிகள் திட்டங்கள் குறித்து ஆராய்வதாகவும் இதன்போது உறுதியளித்தார்.