ஜெயலலிதா உடல்நிலை தொடர்ந்து கண்காணிப்பு

292 0

201610100036489953_for-the-18th-day-of-treatment-she-continued-health_secvpfசென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் 18–வது நாளாக சிகிச்சை பெறும் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையை தொடர்ந்து டாக்டர்கள் கண்காணித்து வருகின்றனர். வெங்கையா நாயுடு, நாராயணசாமி உள்ளிட்டோர் நலம் விசாரித்தனர்.

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை

தமிழக முதல்–அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவுக்கு கடந்த மாதம் (செப்டம்பர்) 22–ந் தேதி இரவு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டது. சிகிச்சைக்காக அவர் சென்னை ஆயிரம்விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு டாக்டர் சிவக்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதற்கு இடையே, கடந்த மாதம் 30–ந் தேதி லண்டன் டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலேவும் சென்னை வந்து முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை மேற்கொண்டார். தொடர்ந்து, டெல்லி ‘எய்ம்ஸ்’ ஆஸ்பத்திரி டாக்டர்கள் குழுவும் அவருடன் வந்து இணைந்து கொண்டு ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தது.

டாக்டர்கள் கண்காணிப்பு

டாக்டர்களின் தொடர் சிகிச்சையால் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. தொடர்ந்து, அவருக்கு நுரையீரல் தொற்று பாதிப்பை நீக்கவும், சீரான சுவாசம் மேற்கொள்ளவும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், ஊட்டச்சத்து, பிசியோதெரபி உள்ளிட்ட சிகிச்சைகளும் அவருக்கு வழங்கப்படுகிறது.

நீண்ட நாட்களாக அவர் தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டும் என்று அப்பல்லோ ஆஸ்பத்திரி டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ள நிலையில், நேற்று 18–வது நாளாக முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஜெயலலிதாவின் உடல் நிலையை தொடர்ந்து டாக்டர்கள் கண்காணித்து வருகின்றனர்.

தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, டெல்லி ‘எய்ம்ஸ்’ ஆஸ்பத்திரி டாக்டர்கள் நேற்று முன்தினம் இரவு புறப்பட்டு சென்றனர். அவரை தொடர்ந்து, லண்டன் டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலேவும் நேற்று காலை புறப்பட்டு சென்றார். அவர் இன்னும் ஒரு சில தினங்களில் மீண்டும் சென்னை வந்து முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சையை தொடருவார் என தெரிகிறது.

அதே நேரத்தில், டெல்லி ‘எய்ம்ஸ்’ ஆஸ்பத்திரி டாக்டர்களில் ஒருவரான கில்நானி நேற்று இரவு 9 மணிக்கு சென்னை வந்தார். அவர் தொடர்ந்து, ஜெயலலிதாவின் உடல்நிலையை கண்காணித்து வருகிறார்.

அரசியல் தலைவர்கள் வருகை

இவ்வாறு சிகிச்சை ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தாலும், மற்றொரு பக்கம் அரசியல் கட்சி தலைவர்களும், ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து தெரிந்துகொள்வதற்காக தினமும் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு வந்த வண்ணம் உள்ளனர். நேற்றும் பல அரசியல் தலைவர்கள் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு வந்தனர்.

மத்திய மந்திரி வெங்கையா நாயுடு, புதுச்சேரி மாநில முதல்–மந்திரி நாராயணசாமி, புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் தெகலான் பாகவி, மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, மக்கள் தேசிய கட்சி தலைவர் சேம.நாராயணன், இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில தலைவர் பஷீர் அகமது, இந்திய உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் மணிகண்டன், நடிகர் ராமராஜன் உள்ளிட்டோர் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு வந்து முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து விசாரித்து சென்றனர்.

வெங்கையா நாயுடு

ஆஸ்பத்திரிக்கு வெளியே மத்திய மந்திரி வெங்கையா நாயுடு நிருபர்களிடம் கூறியதாவது:–

முதல்–அமைச்சர் உடல்நிலை குறித்து விசாரிக்க வந்தேன். அவருக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்களை சந்தித்தேன். அவருக்கு என்ன மாதிரியான சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பது குறித்து டாக்டர்கள் விவரித்தார்கள். அவருடைய உடல்நிலை தேறிவருவதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.

சிகிச்சைக்கு முதல்–அமைச்சர் நல்ல ஒத்துழைப்பு கொடுக்கிறார். அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் சூழ்நிலையில், தேவையற்ற வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம். முதல்–அமைச்சர் சிகிச்சை தொடர்பாக ஆஸ்பத்திரியில் இருந்து மருத்துவ அறிக்கைகள் தொடர்ச்சியாக வெளியிடப்படுகின்றன. அவர் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்புவார் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழக மக்களுக்கு சேவையாற்ற அவர் மீண்டு வருவார்.  இவ்வாறு அவர் கூறினார்.

நாராயணசாமி

புதுச்சேரி முதல்–மந்திரி நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:–

முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து, பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்களிடம் விசாரித்தோம். அவர்கள் முதல்–அமைச்சரின் உடல்நலம் தேறிவருவதாக தெரிவித்தனர்.

தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சி நிர்வாகிகளும் முதல்–அமைச்சரின் உடல்நலம் குறித்து அமைச்சர்களை சந்தித்து விசாரித்து செல்கின்றனர். தமிழக முதல்–அமைச்சர் பூரண குணமடைய வேண்டும் என்று புதுச்சேரி மாநில மக்கள் சார்பிலும், என்னுடைய சார்பிலும் வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன். முதல்–அமைச்சர் ஜெயலலிதா பூரண குணமடைய இறைவன் அருள்புரிவார்.  இவ்வாறு அவர் கூறினார்.

ஜி.கே.வாசன்

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியதாவது:–

தமிழக முதல்–அமைச்சரின் உடல்நலம் குறித்து நேரடியாக தெரிந்துகொள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு வந்தோம். மருத்துவமனை இயக்குனர், முதல்–அமைச்சருக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் மற்றும் அமைச்சர்களை சந்தித்தேன். அவர்களிடம் முதல்–அமைச்சருக்கு அளிக்கப்படும் சிறப்பு சிகிச்சை குறித்து கேட்டறிந்தேன்.

அவர்கள் முதல்–அமைச்சர் நல்ல உடல்நலம் பெற்றுவருவதாக தெரிவித்தனர். முதல்–அமைச்சர் பூரண குணமடைந்து மக்கள் பணியாற்ற வேண்டும் என்று த.மா.கா. சார்பில் வாழ்த்துகிறேன்.  இவ்வாறு அவர் கூறினார்.

டாக்டர் அன்புமணி

பா.ம.க. இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:–

முதல்–அமைச்சர் விரைவில் குணமடைந்து அவரது பணிகளை தொடர வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். ஆஸ்பத்திரியில் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோரை சந்தித்து பேசினேன். முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு செயற்கை சுவாசம் மூலமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் விரைவில் குணமடைய என்னுடைய சார்பிலும், பா.ம.க. சார்பிலும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

துணை முதல்–அமைச்சர் நியமிக்க தற்போதைக்கு அவசியம் ஏற்படவில்லை. அது அவர்களுடைய கட்சி சார்ந்த விஷயம். அதுபற்றி அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். இந்த சூழலில் அரசு நிர்வாகத்தில் முக்கிய முடிவுகளை எடுக்க கவர்னர் துணை புரிய வேண்டும். மேலும், அரசு நிர்வாகத்திற்கு தகுந்த ஆலோசனைகளும் வழங்க வேண்டும்.  இவ்வாறு அவர் கூறினார்.

டி.ராஜா

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா கூறியதாவது:–

முதல்–அமைச்சரின் உடல்நலம் குறித்து விசாரிக்க டெல்லியில் இருந்து வந்தேன். அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் அங்கிருந்த அமைச்சர்களை சந்தித்து பேசினேன். முதல்–அமைச்சருக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர் ஒருவரிடமும் பேசினேன். அவர்கள் முதல்–அமைச்சரின் உடல்நிலை தேறிவருவதாக தெரிவித்தனர்.

முதல்–அமைச்சர் விரைவில் பூரண குணமடைந்து எப்போதும் போல் மக்கள் பணியாற்ற வேண்டும் என்று என்னுடைய சார்பிலும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பிலும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.  இவ்வாறு அவர் கூறினார்.

தொண்டர்கள் பிரார்த்தனை

முதல்–அமைச்சர் ஜெயலலிதா பூரண குணமடைய வேண்டி, அப்பல்லோ ஆஸ்பத்திரி முன்பு தினமும் அ.தி.மு.க. தொண்டர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். அ.தி.மு.க. மகளிரணியினர் வழக்கம்போல் தேங்காய் உடைத்தும், சூடன் ஏற்றியும் பிரார்த்தனை செய்தனர். மாலையில் நடிகர் குண்டுகல்யாணத்தின் மகள் லோகலட்சுமி தலைமையில் பைரவர் பூஜை நடந்தது. இதில், ஏராளமான அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டு முதல்–அமைச்சர் ஜெயலலிதா பூரண குணமடைய வழிபாடு செய்தனர்.