துபாயில் ரூ.60 கோடிக்கு கார் எண் ஏலம் விடப்பட்டது. அதை இந்திய தொழில் அதிபர் பல்விந்தர் சஹானி என்ற அபு சபா வாங்கினார்.
துபாயில், கவர்ச்சிகரமான வாகன எண்களை சாலை போக்குவரத்து அதிகாரிகள் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை ஏலம் விட்டு வருகிறார்கள். அதுபோல், நேற்று முன்தினம் நடந்த ஏலத்தில் 80 எண்கள் ஏலத்துக்கு முன்வைக்கப்பட்டன. 300–க்கும் மேற்பட்டோர் பங்கேற்று போட்டிபோட்டு ஏலம் கேட்டனர்.
இந்த ஏலத்தில், ‘டி5’ என்ற எண், அதிக தொகைக்கு ஏலம் போனது. 33 மில்லியன் திராம் (ரூ.60 கோடி) கொடுத்து, அதை இந்திய தொழில் அதிபர் பல்விந்தர் சஹானி என்ற அபு சபா வாங்கினார். அவர் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வருகிறார்.
அவருக்கு கவர்ச்சிகரமான எண்களை சேகரிப்பதுதான் பொழுதுபோக்கு. ஏற்கனவே இதுபோன்ற 10 எண்களை அதிக தொகைக்கு வாங்கி உள்ளார். இன்னும் நிறைய எண்களை வாங்க போவதாக கூறினார். ‘டி5’ எண்ணை தனது ரோல்ஸ் ராய்ஸ் கார்களில் ஒன்றுக்கு பயன்படுத்தப் போவதாக அவர் தெரிவித்தார்.