சிறிய கட்சிகளைக் காரணம் காட்டி நிறைவேற்றதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பில் இருந்து நழுவ பிரதான கட்சிகள் முயற்சிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார்.
நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி ஆட்சி முறைமையை ஒழிப்பது தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணி அனைத்துக் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்திவருகின்றது. அந்தவகையில் ஐக்கிய தேசியக் கட்சியுடனான பேச்சுவார்த்தையின் போது, ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கின்ற ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடி இவ்விடயம் குறித்த தமது நிலைப்பாட்டை அறிவிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி குறிப்பிட்டிருந்தது. இவ்விடயம் தொடர்பில் வினவிய போதே மேற்கண்டவாறு குறிப்பிட்ட சுமந்திரன் மேலும் கூறியதாவது,
நிறைவேற்றதிகார ஜனாதிபதி ஆட்சி முறைமை ஒழிப்பு என்பது நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதியாகும். அதனை நிறைவேற்றுவது தொடர்பில் நாட்டின் இரு பிரதான கட்சிகளுக்கும் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
ஏனெனில் இந்த பிரதான கட்சிகளில் ஏதோவொரு கட்சியைச் சேர்ந்தவர் தான் நாட்டின் நிறைவேற்றதிகாரமுடைய ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்படுவார் என்பதால் அவர்கள் அதனை தொடர்ந்தும் பேணுவதற்கே விரும்புவார்கள்.
அதேவேளை சிறிய கட்சிகள் சில நிறைவேற்றதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையை ஒழிக்கக்கூடாது என்று கூறுகையில், அதனை ஒரு காரணமாகக் கூறி நழுவ முயற்சிக்கின்றார்கள். எனவே இந்த சிறிய கட்சிகள் அந்தத் திட்டத்திற்குப் பலியாகிவிடக் கூடாது என்றார்.