நான் அதிபரானால்.., ஹிலாரியை சிறையில் தள்ளுவேன்

423 0

201610100942315715_trump-vows-to-jail-clinton-over-emails-if-he-wins-white_secvpfஅமெரிக்காவின் அதிபராக நான் பொறுப்பேற்றால் ஹிலாரி கிளிண்டனை சிறையில் தள்ளுவேன் என அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. இதனையடுத்து புதிய அதிபரை தேர்ந்தெடுக்க வரும் நவம்பர் மாதம் 8-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் களம்காண உள்ள குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான பிரைமரி தேர்தல்கள் பல்வேறு மாகாணங்களில் நடந்து வந்தன. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக, முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவியும், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான ஹிலாரி கிளிண்டன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் அரசு அலுவல்களுக்கு தனது தனிப்பட்ட ‘இமெயில்’ முகவரியை பயன்படுத்தியது தொடர்பாக அவரது அரசியல் எதிரிகள் சர்ச்சையை கிளப்பி வருகின்றனர். குறிப்பாக, இந்த இமெயில் சர்ச்சை தொடர்பாக ஹிலாரியிடம் விசாரணை நடத்தி அவரை அதிபர் வேட்பாளர் போட்டியில் இருந்து தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தி வருகிறார்.

ஊழல் மற்றும் வரி ஏய்ப்பு செய்த ஆதாரங்கள் அடங்கிய 33,000 இமெயில்களை அமெரிக்க போலீசின் விசாரணையிலிருந்து தப்பிப்பதற்காக ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் நீக்கியுள்ளதாக குடியரசு கட்சி குற்றம்சாட்டி வருகிறது.

இதுதொடர்பாக, ஹிலாரியின் அரசு உதவியாளர் மற்றும் வெளியுறவுத்துறை அதிகாரிகளிடம் தேசிய புலனாய்வு போலீசார் (எப்.பி.ஐ.) ஏற்கனவே விசாரணை நடத்தியுள்ளனர். ஹிலாரியிடமும் சமீபத்தில் விசாரித்தனர்.இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஹிலாரி கிளிண்டனும், டொனால்ட் டிரம்ப்பும் மக்களிடையே இரண்டாவது முறையாக நேரடி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்று விவாதித்து வருகின்றனர்.

செயிண்ட் லூயிஸ் நகரில் நடைபெற்ற இந்த 90 நிமிட விவாத நிகழ்ச்சியின்போது பெண்களைப் பற்றி தரக்குறைவாக விமர்சித்த டொனால்ட் டிரம்ப்பை ஹிலாரி கடுமையாக தாக்கி குற்றம்சாட்டினார்.அது, நடந்து முடிந்த பழைய கதை என்று பதிலளித்த டிரம்ப், நான் வெள்ளை மாளிகையில் அதிபராக பொறுப்பேற்றவுடன் அரசு அலுவல்களுக்காக தனிப்பட்ட இமெயில் சர்வரை பயன்படுத்தி, அதன்வழியாக நாட்டின் முக்கிய ரகசியங்கள் கொண்ட சுமார் 30 ஆயிரம் முக்கிய கடிதங்களை கசியவிட்டு, நாட்டின் பாதுகாப்பை கேள்வி குறியாக்கி விட்டீர்கள். இதற்காக நீங்கள் அவமானப்பட வேண்டும் என குற்றம்சாட்டினார்.

இதற்கு பதிலடி கொடுத்த ஹிலாரி, இவ்வளவு ஆவேசம் கொண்ட நபரை இந்த நாட்டின் சட்டத்தை பாதுகாப்பவராக வெள்ளை மாளிகைக்கு நீங்கள் (வாக்காளர்கள்) அனுப்பாமல் இருப்பது நல்லது என்றார். இதற்கு நெற்றியடியாக தனது கருத்தை பதிவு செய்த டிரம்ப், (நான் வெள்ளை மாளிகையில் சட்டத்தை பாதுகாக்கும் அதிபர் பொறுப்புக்கு வந்து விட்டால்) ஏனென்றால், நீங்கள் சிறைக்கு போக வேண்டியதாகிவிடும் என்று கூறினார்.வரும் 19-ம் தேதியும் டிரம்ப் – ஹிலாரி ஆகியோருக்கு இடையிலான நேரடி விவாத நிகழ்ச்சி நடைபெறுகிறது.