நீதிமன்றங்களில் பிணைவழங்கும் சட்டத்தில் இருக்கும் கடினமான நிபந்தனைகள் காரணமாக குற்றம் சாட்டப்படுபவர்களுக்கு தண்டனையை அனுபவித்த பின்னரே பிணை வழங்கப்படுகின்றது.
அதனால் பிணை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படவேண்டும். அத்துடன் எதிர்க்கட்சிகளை சிறையிலடைப்பது தொடர்பில் சிந்திக்காமல் அரசாங்கம் நீதிமன்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.
அத்துடன் நாட்டில் இருக்கும் நீதிமன்றங்களில் அதிகமான நீதிமன்றங்கள் மிகவும் மோசமான நிலையிலே உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பாராளுமன்றத்தில் இந்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் பொது நிருவாகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு மீதான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.